பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

கலைஞர் மு. கருணாநிதி


எதிர்காலத்துக்கும் சேர்த்துத்தானே அவர் போராடுகிறார், அதை மறந்துவிடாதே! என்ன; நான் சொல்வதைக் கேட்பாயா?" என்று கேட்டுக் கொண்டே தேம்பித் தேம்பி அழுதாள் வேளிர்குலத்து அரசி.

தாமரையும் “அண்ணி"! என்று கதறிக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

உணர்ச்சியை அள்ளிக் கொட்டிப் பேசியதால் அரசிக்கு இருமல் அதிகமாயிற்று. ஓயாமல் இருமி இருமித் துடித்துத் துவண்டாள். நெஞ்சாங்குழாய் எல்லாம் வலி கண்டு "அய்யோ! அம்மா! அப்பா!" என்று கத்திக் கொண்டேயிருந்தாள். கண்களிலேயிருந்து தடைபடாமல் நீர் வழிந்து கொண்டேயிருந்தது.

தாமரை, தகுந்த சிகிச்சைகள் செய்து அரசியைக் களைப்பு நீக்கிப் படுக்க வைப்பதற்குள் மிகவும் பயந்து விட்டாள். இதுதான் அண்ணியின் கடைசிக் கட்டம் போலும் என்று அவள் தீர்மானித்துக் கொண்டு, அண்ணனையும் காணோமேயென்று அலறித் துடித்தாள். ஆனால் அவள் பயந்தது போல் ஒன்றும் நடந்து விடவில்லை. அரசி சிறிது நேரத்திற்கெல்லாம் கண்ணயர்ந்து விட்டாள்.

தாமரையின் சிந்தனை மீண்டும் சிறகு கட்டிக் கொண்டு புறப்பட்டது. முத்துநகையைப் பழி வாங்க. தான் போட்ட திட்டமும் - அண்ணியின் வேண்டுகோளும் வெவ்வேறு திசை நேர்க்கோடுகளாகப் போகாமல் ஒவ்வொன்றும் வளைந்து கொடுத்து ஒன்றையொன்று தொட முயல்வதாகவே எண்ணினாள். தரையில் பச்சிலை ஒன்றினால் அவள் இழுத்த இரண்டு வளைவுக் கோடுகளும் அவளுக்கு அந்தக் கருத்தை நினைவூட்டின.

தாமரை, செழியனைக் காதலித்து அவனைத் தன்னுடையவனாக ஆக்கிக் கொண்டால் ஒரே கணையில் இரண்டு மான்கள் வீழ்ந்தது போலத்தான்! முத்துநகையையும் பழிவாங்கிக் கொள்ளலாம். செழிய னைக் கொண்டே இருங்கோவேளின் இலட்சியத்தையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று திட்டம் தீட்டினாள் அவள்.

அப்போது புரண்டு படுத்த அரசி திடுக்கிட்டவளாய் எழுந்து "தாமரை! தாமரை கொண்டுவா ஒரு குதிரையை!" என்று கத்தினாள். "அண்ணி! அண்ணி!" என்று தாமரை எழுந்து ஓடினாள். "எனக்குத் தெம்பு வந்து விட்டது தாமரை! புதிய பலம் வந்து விட்டது. நான் ஒருத்தியே கிளம்பிச் சோழனிடம் செல்கிறேன். அவனைப் பழிவாங்கு கிறேன். என் நாயகனின் இலட்சியத்தை நிறைவேற்றுகிறேன். இப்படி ஒரு கனவு கண்டேன். அந்தக் கனவு இப்போதே பலிக்கப் போகிறது.