பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரோமாபுரிப் பாண்டியன்

217


கொண்டுவா குதிரையை!" என்று கட்டிலை விட்டுக் கீழே குதிக்க முயன்றாள் அரசி.

சரி! அண்ணிக்குக் குளிர்கண்டு விட்டது என்று தீர்மானித்த தாமரை அவளைப் பலவந்தமாகப் படுக்க வைத்துத் தோழிகளை விட்டு மருத்துவர்களை அவசரமாக அழைத்துவரச் சொன்னாள். மருத்துவர்கள் ஓடிவந்து பயம் ஒன்றுமில்லையென்று கூறிவிட்டுத் தூங்குவதற்கான மருந்து கொடுத்து அரசியாரைத் தூங்க வைக்க முயன்றார்கள்.

"அவர் எங்கே? அரசர் எங்கே ? என் ராஜா எங்கே?" என்று கேட்டவாறே அரசி தூங்க ஆரம்பித்தாள்.

தாமரையும் பெருமூச்சு விட்டு ஆறுதலடைந்தாள்.

"அவர் எங்கே? என் ராஜா எங்கே?" என்று மரமாளிகையில் அரசி கதறியது போலவே முத்துநகையும் கதறிக் கொண்டு பாழ்மண்டபத்துக்கு வந்து சேர்ந்தாள். பரபரப்புடன் சுற்று முற்றும் பார்த்தாள். குளக்கரைக்கு ஓடினாள். படித்துறையில் தேடினாள். எந்த அறிகுறியும் தென்பட வில்லை, அவள் மனம் பட்டபாட்டை அவளைத் தவிர வேறு யாரால் வர்ணிக்க இயலும்?

படித்துறைகளில் இரத்தத் துளிகள் காய்ந்து கருமை நிறம் பெற்றுக் காட்சியளிப்பதைக் கண்டு, "ஓ!" வென அலறிக் கண்களைப் பொத்திக் கொண்டாள். மண்டபத்திலும் இரத்தம் உறைந்து கிடந்தது. அது தன் காதலனின் இரத்தம்தான்! அந்த இரத்தக்கறையின் மீது முகத்தைப் பதித்துக் கொண்டு முத்துநகை "அத்தான். அத்தான்!" என்று கதறிய கொடுமையைக் கண்டு அவளுக்கு ஆறுதல் கூற அங்கு யாரும் இல்லை.

எழுந்தாள், வெறிகொண்டவளைப் போல! தடாகத்தை நோக்கினாள். "எங்கே என் அத்தான்?" என்று அழுதாள். தூணும் அந்தக் கேள்விதான் கேட்டது.

அதே மண்டபத்தில் - அதே குளக்கரையில் - அவளும் அவள் ஆசை அத்தானும் பேசியதும் பழகியதும் நினைவுக்கு வராமல் போகுமா?

நினைவுகள் ஈட்டிகளாக மாறி வதைத்தன. உடல் நெருப்பாக எரிந்தது. குளத்தில் குதித்தாள். முழுகி முழுகி எழுந்தாள். அத்தானின் பிணத்தைத் தேடத் தொடங்கினாள். அவள் கையில் எதுவும் சிக்கவில்லை.

கடைசித் தடவையாக அவள் முழுகி எழுந்தபோது அவள் கையோடு ஓர் உடை வந்தது. ஆம் அது அவன் அணிந்திருந்த உடைதான்! 'அத்தான் மேனியில் இருந்த உடையேதான். அந்த உடையை மாறிமாறி முத்தமிட்டுக் கதறினாள்; புலம்பினாள். மீண்டும் குளத்தில் தேடினாள். ஏமாற்றத்துடன் கரையேறி மண்டபத்துக்கு வந்தாள்.