20
கலைஞர் மு. கருணாநிதி
20 கலைஞர் மு. கருணாநிதி வியாதியினாலேயே அவர்கள் அதை முடிக்காமல் போனார்களா, வேறு வகையினாலே போனார்களா என்பது தெரியவில்லை என்று வரலாறு குறிக்கிறது. ஆக, தென்கிழக்கு ஆசியா முழுவதையும் பார்த்தால் நம்முடைய நாகரிகம் எப்படிப் பரவியிருக்கிறது; நம்முடைய மன்னர்கள் எவ்வளவு தூரம் அங்கே போய் இருக்கிறார்கள் என்பது தெரியும். கடாரங்கொண்டான், கங்கை கொண்டான் என்கிற வரலாறுகளை நாம் இன்றைக்குக் கேட்கிறோம். அதிலும் ரோமாபுரிக்குப் போவது, தமிழ் நாட்டிலேயிருந்து போவது ரொம்ப வசதியாகும். பருவக்காற்று தோதாக அடித்தால் நீங்கள் பாயை இறக்கிவிட்டு பேசாமல் இருக்கலாம். அது நேரே இத்தாலிக்குத்தான் போகுமே தவிர வேறு எங்கேயும் போகாது. ஆகவே பருவக் காற்றினுடைய துணையைக் கொண்டு அவர்கள் போயிருக்கிறார்கள். அதை வரலாறாகக் கண்டு நண்பர் கருணாநிதி அவர்கள் வாராவாரம் எழுதும்போது, அது இவ்வளவு பெரிய புத்தகமாக வருமா என்பது அவருக்கே தெரியாது. வாராவாரம் எழுதினார். சமயங்களிலே கல்கிகூடத் திருத்தம் போடுவதுண்டு. சென்ற வாரம் எழுதியதிலிருந்து இதை இப்படி மாற்றிப் படித்துக்கொள்ளுங்கள் என்று. இவர் அப்படியில்லாமல், இரண்டு தடவை வேறு வேறு பத்திரிக்கையிலே எழுதி ஒரு நல்ல நூலாக ஆக்கியிருக்கிறார். இவ்வளவு வேலைகளுக்கு இடையிலேயும்கூட அவருடைய பேனா தெளிவாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த நூலும் ஒரு சான்றாகும். இந்த முதல் நூலைப் பெற்றுக் கொள்வதிலேயே நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால், கலைஞரிடமிருந்து நான் முதன்முதலாகப் பெற்றுக்கொண்டதுதான் கவிஞர் என்ற அடைமொழி. அப்போது இரண்டே இரண்டு கவிதை மட்டும் எழுதியிருந்த என்னைப் பொள்ளாச்சிக்கு அழைத்துக் கொண்டுபோய் "கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பேசுவார்கள்" என்று அவர் சொன்னவுடனே, எனக்கே என்னவோ மாதிரி இருந்தது. ஆக அவரிடமிருந்து அப்போது நான் அந்த விருதைப் பெற்றுக் கொண்டேன்; இப்போது இந்த நூலைப் பெற்றுக் கொள்கிறேன். இதுபோன்ற பல நூல்களையும் நான் அவரிடமிருந்து பெற முடியும். இந்தப் பதவியே போனாலும்கூட அவர் கையிலே இருக்கிற பேனா இந்த நாட்டைச் சுழன்றடிக்கின்ற சூறாவளியாக இயங்கும். இந்தப் பதவியை யாராவது பறித்துக் கொண்டாலும் அவர்களை அந்தப் பேனாதான் பதம் பார்க்கும். அந்த அளவுக்குச் சக்தியுள்ள அந்தப் பேனா இன்னும் தொடரட்டும் என்கின்ற என்னுடைய வாழ்த்துக்களோடு இதனை நான் பெற்றுக்கொள்கிறேன். வணக்கம்