ரோமாபுரிப் பாண்டியன்
219
வந்திருக்க வேண்டும்; அவள் தான் இங்கே கொண்டு வந்திருக்க வேண்டும் என்று அவள் முடிவு செய்து கொண்டாள். சுவரில் எழுதப்பட்டிருந்த அந்த எழுத்துக்கள் அவள் கண்களின் எதிரே பயங்கரமாகக் கூத்தாடிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு எழுத்திலிருந்தும் இரத்தம் கொட்டுவது போலத் தெரிந்தது. "அத்தான்! அத்தான்!" என்று அவள் இதயம் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
அவள் கன்னங்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரை ஒரு பெண்ணின் கரம் மெதுவாகத் துடைத்தது. அந்தக் கரத்தின் பக்கம் முத்துநகை திரும்பினாள். தாமரைதான் அங்கே உட்கார்ந்திருந்தாள்.
"அத்தான்!" என்று தாமரையின் இதழ்கள் மெல்ல உச்சரித்தன.
உடனே முத்துநகைக்குத் தன்னைச் சரிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அவசர உணர்ச்சி தோன்றியது. படுத்திருந்தவள், தன்மேல் அணிந்திருந்த ஆண் உடை சரியாக இருக்கிறதா என்று மார்பகத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள். திகீர் என்றது அவளுக்கு, திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தாள். தன்னை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்துக் கொண்டாள். தான் ஆண் வேடத்தில் இல்லை, பெண்ணாகவே இருக்கிறோம் என்பதை உடனே தெரிந்து கொண்டாள். தன் வேடத்தை கலைத்தது யார்? தாமரையாகத்தான் இருக்குமோ? யார் கலைத்தால் என்ன? தாமரைக்கும் தன் தந்திரங்கள் புரிந்துவிட்டன. தானும் இங்கு வந்து சிக்கிக் கொண்டாகிவிட்டது. புதிய புதிய ஆபத்துக்கள் ஏதேதோ காத்திருக்கின்றன என்று அவள் தீர்மானித்துத் தாமரையைச் சற்று வெட்கத்தோடும் கோபத்தோடும் பார்த்தாள்.
தாமரை மிகுந்த சினத்துடன் இருக்கிறாள் என்பது அவள் பார்வையிலேயே புரிந்தது. யார் முதலில் பேசுவது என்ற பிரச்சினையும் இருவரிடையே பலமாக எழுந்தது.
யார்தான் முதலில் பேச முடியும்? ஒருத்தி ஏமாந்தவள்; இன்னொருத்தி ஏமாற்றியவள். இருவரிடையே நடமாடியதோ காதல் விவகாரம். தன் உள்ளத்தைக் கொள்ளையடித்து இறுதியில் பெருத்த அவமானத்திற்கு உள்ளாக்கிவிட்ட ஒரு வஞ்சகியைப் பழிவாங்கிக் கொள்ளச் சரியான சந்தர்ப்பம் கிடைத்தது என்று எண்ணிக் கொண்டே தாமரை அவளைப் பயங்கரமாக நோக்கினாள். வாழ்வில் பேரிடியே விழுந்துவிட்டது. இனி என்ன வந்தால் என்ன என்ற துணிவோடு முத்துநகை உள்ளத்தைத் திடப்படுத்திக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். தாமரை வேண்டுமென்றே முத்துநகையின் தங்கம் மின்னும் அங்கங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் செய்கையில் வெறுப்புற்ற முத்துநகை சற்றுக் கடுமையான குரலில் "என்ன பார்க்கிறாய்?" என்று கேட்டாள்.