ரோமாபுரிப் பாண்டியன்
225
நினைக்கும்போதும் அவனால் அந்தச் சிக்கலை எப்படி அவிழ்ப்பது என்றே தோன்றவில்லை. திண்டாடினான்.
இந்தக் குழப்பங்களோடுதான் அவன் அன்றிரவு தன் ராணியைப் போய் சந்தித்தான். கணவனின் முகத்தில் என்றுமில்லாத சோகம் கப்பியிருப்பதைக் கண்டு அரசி கலங்கினாள். தன் கணவன் பல நாட்களாகவே சோகச் சிலையாக மாறிவிட்டான் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தாலும் அன்றைய தினம் அவள் கண்ட இருங்கோவேள் நடைப்பிணம் போல் தோன்றியதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அரசியின் அருகே சென்று இருங்கோவேள் அமர்ந்தான். இருவரின் விழிகளும் உறவாடிக் கொண்டன. அரசி கண்ணீர் வடித்தாள்.
கரகரத்த குரலில் இருங்கோவேள், "அழாதே கண்ணே!" என்று ஆறுதல் கூறி அவளைத் தன் அகன்ற மார்பின் மீது சாய்த்துக் கொண்டான்.
"இந்தச் சோகத்திற்கு முடிவே கிடையாதா?” என்று அவள் கேட்டாள். மன்னன் பதிலுரைக்கவில்லை.
"இந்த வாழ்க்கையில் மாற்றமே இல்லையா?" இருங்கோவேளின் உதடுகள் அசைந்தன.
"ஏனில்லை! இருங்கோவேள் தன் இலட்சியம் நிறைவேறாமல் சாகமாட்டான்” என்று அழுத்தந்திருத்தமாகக் கூறினான்.
"அந்தக் கரிகால் மன்னர் ஒழிக்கப்பட வேண்டும்; அது தானே உங்கள் இலட்சியம்?” என்று ஆத்திரத்தோடு கேட்டாள் அரசி.
"ஆம் கண்ணே! அதுதான் நமது இலட்சியம்; ஏன் உனக்குப் பிடிக்கவில்லையா, இந்த இலட்சியம்?"
"என் ராஜாவின் இலட்சியமே என் இலட்சியம். அந்த இலட்சியம் நிறைவேற இந்த உயிர் போனாலும் எனக்கு எவ்வளவோ மகிழ்ச்சி. ஆனால் கேவலம் இருமல் அல்லவா என் உயிரை வாங்கிவிடும் போலிருக்கிறது!" என்று கூறியவாறு இரும ஆரம்பித்தாள்.
இப்போதும் கடுமையான இருமல், நெஞ்சுவலி, தாமரை ஓடி வந்து சிகிச்சையில் ஈடுபட்டாள்.
நீண்ட நேரக் கஷ்டத்துக்குப் பிறகு அரசியைப் படுக்க வைத்துத் தூங்கச் செய்துவிட்டுத் தாமரை படுப்பதற்குப் போய்விட்டாள். அதுவரையில் அங்கேயே உட்கார்ந்து ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருந்தான் இருங்கோவேள் முத்துநகையைச் சோதிப்பதற்காகச் சுவரில்