ரோமாபுரிப் பாண்டியன்
21
2. அறிமுகம் மாவீரன் பாம்பே -- மாவீரர்களை மண்டியிட வைத்த சீசர்- சீசர் வளர்த்த சிங்கம் அந்தோணி - அந்தோணியை அடக்கிய அகஸ்டஸ் - இப்படி வீரத் திருவிளக்குகளின் ஒளி மழையால் எழில் கொண்டு விளங்கிய பூமி ரோமாபுரி. - அது வாழ்ந்த விதமும் தாழ்ந்த கதையும் யாரும் அறியாத ரகசியமல்ல. ரசவல்லிகளின் மைவிழிகள்-மதுக்கிண்ணங்கள் இவைகளே அந்தத் திருநாட்டின் பெரு வீழ்ச்சிக்குக் காரணம் என்ற விளக்கத்தை வரலாறு புலம்பிக் காட்டுகிறது. ஏற்றமும் பொலிவும் குலுங்க என்றைக்கோ ஒரு நாள் மலையில் ஏற்றிவைத்த தீபம்போல் அந்தச் சின்னஞ்சிறு சிங்காரப் பொன்னாடு எட்டுத்திக்கும் புகழ் பரப்பிக் கொண்டிருந்தது. அதன் மெருகு குலைந்து அடித்தளமும் ஆட்டங்கொடுத்துப் புழுதியில் வீசப்பட்ட வீணையென ஆகிவிட்ட காலத்தை, கி.பி.1453 என்று கணக்கிட்டுக் கூறுவார்கள், சரித்திர ஆசிரியர்கள். ரோமானியப் பேரரசை உலகுக்கு முதன் முதல் அறிமுகப் படுத்திய பெருமை யாருக்கு உரியதாக இருந்தாலும், அந்தப் பிஞ்சுக் குழந்தையைப் பெற்றெடுத்த கௌரவம் முழுமையும் 'ரோமுலஸ்' என்பவனையே சாரும். கி.மு.753-ல் இத்தாலியிலே லத்தீன் மொழி பேசிக் கொண்டு ஒரு கூட்டம் நுழைந்தது. அந்தக் கூட்டத்தினர் 'தைபர்' ஆற்றங்கரையில் சிறு நகர் ஒன்றைத் தோற்றுவித்தார்கள். நகரைச் சுற்றி ஏழு குன்றுகள்- நடுவிலே நகரம். நகரை அமைத்த கூட்டத்தின் தலைவன்தான் ரோமுலஸ். அவன் பெயரே அந்த நகருக்கு வழங்கலாயிற்று. பற்பல ஆபத்துக்களைச் சந்தித்து, உலகத்தின் கண்ணெதிரே நிமிர்ந்து நிற்க வேண்டுமென்று ரோமாபுரி நெஞ்சை உயர்த்திக் கொஞ்சங் கொஞ்சமாக எழுந்தது. அந்த எழுச்சிக்கு ஊக்கமளித்தவர்கள்தான் உரம் வாய்ந்த பெரு வீரர்களான பாம்பே, சீசர், அந்தோணி, அகஸ்டஸ் போன்றவர்கள்! பாம்பேயின் தலையை எகிப்துக் கடற்கரையின் மணல்மீது நறுக்கிப் போட்டனர் - ஆனால், அதே மணல் வெளியில் சீசரின் மடியில் தலைவைத்து இன்ப சுகம் அனுபவித்தாள் பேரழகி கிளியோபாத்ரா! இது நடந்தது ஏறத்தாழ கி.மு. 48-ல். அந்தச் சீசரைப் பாம்பேயின் சிலை அருகே குத்திக் கொன்றனர், ரோமாபுரிப் பெருந்தகையினர் சிலர். அதன் பின்னர் அந்தோணிக்குச் சொந்தமானாள் எகிப்தின் அழகு ராணி கிளியோபாத்ரா. சீசரின் வளர்ப்பு மகன் ஆக்டேவியசுக்கு ரோமாபுரியைத் தன் ஆதிக்கத்தின் கீழ்க்கொண்டு