ரோமாபுரிப் பாண்டியன்
233
ரோமாபுரிப் பாண்டியன் - 233 இருங்கோவேள் சிலையென நின்று கொண்டிருந்தான். தாமரை அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். பெருந்தேவி!' என நடுங்கும் குரலில் ஒரு கூச்சல் கிளம்பிற்று அவன் வாயிலிருந்து! உடனே அந்த இடத்தை விட்டுத் தன் மாளிகை நோக்கி விரைந்தான். முத்துநகை அழுதவாறு மூலையில் நின்று கொண்டிருந்தாள். அவளிடம் ஆறுதல் எதுவும் கூற விரும்பாத தாமரை, காவலர்களை எச்சரித்துவிட்டு வெளியே சென்றாள். பழையபடி அந்த இடம் பூட்டப்பட்டது. தன் கையிலிருந்த கட்டாரியின் முனையை விரல்களால் தடவிப் பார்த்தவாறு சிந்தனையில் ஆழ்ந்தாள் முத்துநகை. மரமாளிகையை விட்டுப் புறப்பட்ட பெருந்தேவி குதிரையை வேகமாக ஓட்டிக் கொண்டு கானகத்தின் பல பாதைகளில் ஆவேசமுடன் சென்று கொண்டிருந்தாள். கல்லும் முள்ளும் நிரம்பிய பாதை. இருபுறமும் மரங்கள் நெருங்கி வளர்ந்த பாதை. நடுவே வளைந்து கிடந்து குதிரையின் வேகத்தைக் குறைத்துக் கொண்டிருந்தது. அந்த அடர்த்தியான இருளின் பயங்கரமான மௌனத்தைக் கலைத்துக் கொண்டு கோட்டான்கள் ஓலமிட்டுக் கொண்டிருந்தன. கிளைகளில் அமர்ந்து குதிரையின் குளம்படிச் சத்தம் கேட்டுப் பறவைகள் சிறகையடித்துக் கொள்வதற்கும் பெருந்தேவியின் இதயம் படபடப்பதற்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை. நெடுநாளையப் பிணியினால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து படுக்கையிலேயே கிடந்த அவளுக்கு எங்கிருந்து புதுப்பலம் வந்தது என்று அந்தக் குதிரை ஆச்சரியப்பட்டது போலும்! அதனால் இடையிடையே வேகத்தைக் குறைத்துக் கொண்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தது. அரசி விடுவதாயில்லை. குதிரையை விரைவாகச் செலுத்துவதி லேயே கண்ணுங் கருத்துமாயிருந்தாள். காரிருளில் ஓடிக் கொண்டிருந்த குதிரை திடீரெனக் கால் தவறி ஒரு சிறு குழியில் விழுந்து விட்டது. நல்ல வேளையாகப் பெருந்தேவி குதிரையிலேயே உட்கார்ந்து கொண்டி ராமல் ஒரு மரக்கிளையைத் தாவி பிடித்துக் கொண்டு அதிலே தொங்கினாள். விழுந்த குதிரை மெதுவாக எழுந்து நின்றது. மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்த பெருந்தேவிக்குப் புதிய திகில் ஒன்று மின்ன லெனக் கிளம்பியது. காரணம் அவள் பிடித்திருந்தகிளை, மெதுவாக அசைந்ததுதான்! கவனிக்க ஆரம்பித்தாள். மரக்கிளையின் சொர சொரப்பு கைகளுக்குத் தோன்றவில்லை. வழவழப்பான உணர்ச்சிதான் தோன்றி