பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

கலைஞர் மு. கருணாநிதி


244 கலைஞர் மு. கருணாநிதி சேர்ந்து கொண்டாள். புலவரை வரவேற்பதில் அக்கறையும் அவசரமுங் கொண்டிருந்த பெண்களுக்குப் பெருந்தேவியைக் கவனிப்பதற்கு ஏது நேரம்? புலவரின் சிவிகை கொலு மண்டபத்துக்கு அருகே இறக்கப்பட்டது. புலவர் இறங்கிக் கொலு மண்டபம் நோக்கிப் புறப்பட்டார். ஏற்கனவே புலவர்கள் பலர் புடைசூழ நின்று கொண்டிருந்த கரிகால் மன்னன், உருத்திரங்கண்ணனாரை எதிர் கொண்டழைத்து மார்புறத் தழுவிக் கொலுமண்டபத்துக்குள்ளே அழைத்துச் சென்றான். உள்ளே ஆண்களும் பெண்களும் தனித்தனியே அமர்வதற்கேற்ற வகையில் ஆசனங்கள் அமைக்கப்பட்டிருந்தன. புலவர் கூட்டத்தில் விழிகளையோட்டி ஏமாந்த உருத்திரங்கண்ண னார், அரசனைப் பார்த்து ஆவல் ததும்ப, “காரிக்கண்ணனார் எங்கே?" என்று கேட்டார்.அதற்குக் கரிகாலனால் பதில் கூற முடியவில்லை. அவன் கண்கள் கலங்கி விட்டன. சமாளித்துக் கொண்டான். "அவர் மதுரைக்குப் போயிருக்கிறார்?' என்று பொய் கூறி மழுப்பினான். கடியலூராருக்கும் கரிகாலனுக்கும் இடையே பேச்சு வார்த்தைகள் நடைபெறும்போதே பெருந்தேவி பெண்கள் அமரும் பகுதியில் வந்து உட்கார்ந்து கொண்டாள். ஏதோ ஒரு மகத்தான இலட்சியத்தைச் சாதிக்கப்போகிறோம் என்ற கடமை உணர்ச்சியும் வெறித்தனமும் அவளது நோயைக் கூடச் 'சற்றே விலகியிரு!' என்று கூறிவிட்டன. டையிலே மறைத்து வைத்துள்ள கட்டாரியின் பிடியை அழுத்திப் பிடித்தவாறே அவள் கரிகாலனின் முகத்தை நோக்கினாள். தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளச் சமயம் பார்த்திருந்த அவளுக்குக் கரிகால் சோழனின் முகம் சற்றுக் கோழைத்தனத்தை அளித்தது! அவன் கண்களில் கனிவு இருந்தது; கனல் இல்லை. பேச்சில் பண்பு தெரிந்தது; பயங்கரம் இல்லை. கையிலே வாளைப் பிடித்திருக்கிறான். அந்த வாளோ தீயோரைத்தான் தாக்கும் என்று பக்கத்திலுள்ள பெண்கள் மன்னனைப் பற்றி மதிப்புரை வழங்கிக் கொண்டிருந்தார்கள். வேளிர்குல அரசி, எந்தச் சபலத்துக்கும் இடம்கொடுக்கக் கூடாது என்று தீர்மானித்துக் கொண்டு கரிகாலனை வீழ்த்தச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தாள். கடியலூர்ப் புலவர் அமர்வதற்கென அமைக்கப்பட்டிருந்த அழகான இருக்கையில் அவரை அமரச் செய்து விட்டு, மன்னன் தன் இருக்கைக்குச் சென்றான். தேன் தமிழ் பெருக்கெடுத்தோடப் போவதை எண்ணி மகிழ்ந்தவாறு அவையோர் வீற்றிருந்தனர்.