பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

கலைஞர் மு. கருணாநிதி


246 கலைஞர் மு. கருணாநிதி என்ற முழக்கங்கள் எழுந்தன. உருத்திரங்கண்ணனார், கையிலுள்ள சுவடியைப் பிரித்துக் கவிதை மழை பொழியத் தொடங்கினார். "வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கேகினும் தற்பாடிய தளியுணவிற் புள்தேம்பப் புயல்மாறி வான்பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைஇய கடற்காவிரி புனல்பரந்து பொன் கொழிக்கும்" -என ஆரம்பித்துத் தமிழ் முழக்கம் செய்தார். வடதிசைக்கண் நில்லாமல் வெள்ளிமீன் - திசைமாறி தென் திசைக்குப் போயினும், வானம்பாடி மழைத்துளிதூறாது வருந்துகிற அளவுக்கு வானம் பொய்த்து விட்டாலும், காவிரியாறு, தான் பொய்க்காமல் சோழ நாட்டுக் கரையில் பொன்துகள்களை ஒதுக்குகிற அளவுக்குப் பெருக்கெடுத்து ஓடுகிறதாம். இந்தப் பொருள் செறிந்த கவிதை வரிகளைக் கேட்டு அவைக்களம் அசையாத சிலையின் நிலைபெற்றது. முந்நூறு முத்தமிழ் வரிகளைப்பாடி முடித்தார் உருத்திரங்கண்ணனார். அத்தனையும் பலாச்சுளை-நிலா ஒளி மொத்தத்தில் தேனருவி. - பனிமலர்க் குவியல்! கரிகாலன் தன்னை மறந்து அமர்ந்திருந்தான். தமிழ் மாதாவின் அன்புக் கரங்களில் முகத்தைப் பதித்துக் கொண்டிருந்த உணர்வு அவனுக்கு ஏற்பட்டிருந்தது. சோணாட்டில் சோறுவடித்த கஞ்சி, தெருவில் ஆறாக ஓடுகிறது. அங்கே காளைகள் ஒன்றோடொன்று போரிட்டு அந்த இடம் சேறாகிறது. அந்தச் சேற்றிலே தேர்கள் ஓடி ஓடிச் சேறு, தூசுகளாய் மாறி, அந்த அழுக்குத் தூசுகள் வெள்ளிய அரண்மனைகளில் பரவி, அக்கோட்டை கள் புழுதியைப் பூசிக் கொண்ட யானைகள் போலக் காட்சி தருகின்றன. இப்படிச் சோழ நாட்டுச் சிறப்பை வர்ணிக்கும் போது யார் நெஞ்சில்தான் இன்பம் சுரக்காமல் இருக்கும்? கரிகால் மன்னனைப் போலவே அவையிலிருந்த அனைவரும் பூரிப்புத் தாங்கமாட்டாமல் மகிழ்ச்சிக் கண்ணீர் பெருக்கினர். வேளிர்குல அரசி பெருந்தேவியின் காதுகளில் அந்த இன்பத் தமிழ் முழக்கம் கேட்கவில்லை. அவள் கவனமெல்லாம் தன் காரியத்தை வெற்றிகரமாக முடித்துக் கொள்ள எப்போது சமயம் கிடைக்கும் என்பதில்தான் இருந்தது.