ரோமாபுரிப் பாண்டியன்
247
ரோமாபுரிப் பாண்டியன் 247 சேலையின் மறைவில் ஒளித்தவாறு வைத்திருந்த கட்டாரியின் பிடியைத் தளர்த்தாமலே அவள் நேரம் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந் தாள். அவளை யாரும் கவனிக்கவில்லை. எல்லோருடைய கண்களும் காதுகளும் கடியலூர்ப் புலவர் பக்கமே திரும்பியிருந்தன. தமிழ் வளர்க்கும் சோழனைக் கொல்வதற்குத் தனக்குத் தமிழே துணைபுரிகிறது என்று எண்ணிக் கொண்டாள் பெருந்தேவி. யாரும் அவளைக் கவனிக்கவில்லையென்பது உண்மைதான். என்றாலும் அவ ளையுமறியாமல் இரண்டு கூர்மையான விழிகள் கொலு மண்டபத்தின் ஒரு மூலையிலிருந்து அவள் பக்கம் ஊடுருவிப் பாய்ந்து கொண்டி ருந்தன. அந்த விழிகளில் தேங்கியிருந்த ஆவலை - பரபரப்பை - அவ சரத்தை - அச்சத்தை வர்ணிப்பதென்றால் பட்டினப்பாலை பாடிய கடிய லூர்ப் புலவராலும் இயலுமா என்பது சற்று ஐயத்திற்கிடமானதுதான்! அந்த விழிகளுக்குரிய உருவம் நகர்ந்து நகர்ந்து, கொலு மண்டபத்து உட்பகுதிக்கு வந்து கொண்டிருந்தது. வேளிர் அரசியும் தான் முதலில் உட்கார்ந்த இடம் வசதியானது அல்ல என்பதையும் உணர்ந்து, மெதுவாக அரசனின் ஆசனத்திற்கு அருகாமை யில் உள்ள இடம் நோக்கி வந்து கொண்டிருந்தாள். இதற்குள்ளாக உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையைப் பாடி முடித்துச் சுவடியைக் கொண்டு போய்க் கரிகால் மன்னனிடம் அளித்தார். மண்டபம் முழுவதும் மலர் மாரி பொழிந்தது. சுவடியை வாங்கித் தக்க இடத்தில் வைத்துவிட்டு அரசன் அமைச்சரிடம் குறிப்பாக ஏதோ கூறவே அவர் தளபதியை நோக்கிக் கையை அசைத்தார். சற்று நேரத்திற்கெல்லாம் ஐந்தாறு ஆட்கள் தூக்க முடியாமல் திணறியவாறு வெள்ளிப் பேழைகள் சிலவற்றைத் தூக்கி வந்து மண்டத்தின் நடுவே வைத்தனர். அரசன் எழுந்து, புலவரை நோக்கிக் கரங்குவித்தவாறு பேசலானான். 'கவியரசே! சோழ நாட்டின் அன்புப் பரிசாக இந்த வெள்ளிப் பேழைகளிலுள்ள பதினாறு நூறாயிரம் கழஞ்சுப் பொன்னையும் எற்றுக் கொள்ள வேண்டுகிறேன்." எனக் கூறிப் பேழைகளைத் திறக்கச் செய்து பொன்னை அள்ளிப் புலவர் பெருமானின் தலையில் மலர் போலத் தூவினான். அந்த ஆரவாரத்தைக் கண்ட பெருந்தேவி, இதுதான் தக்க தருணமென்று தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள எழுந்தாள். அவள் இலக்குக்கு நேராக கரிகாலன் நின்று கொண்டிருந்தான்.