ரோமாபுரிப் பாண்டியன்
249
ரோமாபுரிப் பாண்டியன் 249 தன் இலக்குத் தவறிவிட்டது; யாரோ ஒருவன் தன் இலட்சியத்தைத் தடுத்துவிட்டான்; தன் முயற்சியத்தனையும் பாழாகி விட்டது என்பதை ஒரு நொடியில் உணர்ந்து கொண்டாள் வேளிர் குல அரசி. அந்த உணர்வுக்குப் பிறகு அவள் உயிர் உடலில் தங்கவில்லை. முட்டிமோதிக் கொண்டு வெளிப்பட்டு அவளது கடைசி மூச்சு, காற்றுடன் கலந்து விட்டது! அய்யோ பரிதாபம்! வேளிர் குல அரசியின் வேதனைகள் கடைசி வரையில் தீரவில்லை. தன் கணவனின் மகிழ்ச்சிக்காக அவள் செய்யத் துணிந்த காரியமும் படுதோல்வி அடைந்து விட்டது. எங்கேயோ பிறந்து, எங்கேயோ வாழ்ந்து, எங்கேயோ எதிரியின் மாளிகைக் கொலு மண்டபத்தில் அந்தப் பெருமைக்குரிய அரசியின் பிணம் கிடந்தது! கரிகாலன் அந்தச் சவத்தின் அருகே வந்து நின்றான். அனைவரும் சூழ்ந்து நின்று பிணத்தின் முகத்தை உற்று உற்றுப் பார்த்தனர். இருங்கோவேளின் மனைவி பெருந்தேவிதான் அரசனைக் கொல்லும் முயற்சியில் ஈடுபட்டுப் பிணமாகி விட்டாள் என்ற உண்மை உறுதிப்படுத்தப்பட்டது. கரிகாலன் மரம்போல் நின்று கொண்டிருந்தான். பெருந்தேவியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் மன்னன். அம்மண்டபத்திலே மயான அமைதி நிலவிற்று. இறுதியாக அமைச்சரைப் பார்த்துச் "சவ அடக்கத்திற்கான ஏற்பாடு கள் சிறப்பாகச் செய்யப்படட்டும், நான் போய் அந்த உழவனைக் கவனிக்கிறேன்" என்று கூறிவிட்டுக் கொலு மண்டபத் திலிருந்து கரிகாலன் வெளியேறினான். கொலு மண்டபத்தில் ஏற்பட்ட குழப்பத்தினால் அதிர்ச்சியடைந்து போயிருந்த உருத்திரங்கண்ணனாரைப் பாண்டியத் தளபதி நெடுமாறன் அழைத்துக் கொண்டு, மெதுவாக அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான். தன் பாடல்கள் அரங்கேறிய அந்த நாளில் இப்படி ஒரு சம்பவம் நடக்க வேண்டுமா என்ற கவலை புலவரை வாட்டியது. "பட்டினப்பாலை அரங்கேற்று விழாவில் சோழன் கொலுமண்டபத் தில் குழப்பம் ஏற்பட்டது என்று எண்ணிக் கொண்டு எதற்காக வருந்த வேண்டும்? அந்த நாளில் அரசனின் உயிருக்கு நேர இருந்த ஆபத்து நீங்கியது என மகிழ்ச்சியடைவதே பொருத்தமு டையதாகும்" என்று நெடுமாறன், புலவருக்குச் சமாதானம் கூறினான். "இப்படி ஒரு நிகழ்ச்சி ஏற்படக் காரணம் என்ன?” என்று புலவர் கவலையுடன் கேட்டார்.