270
கலைஞர் மு. கருணாநிதி
270 கலைஞர் மு. கருணாநிதி அவள் அந்தச் சோகச் செய்தியைச் சொல்லி முடிப்பதற்குள் செழியன், "ஆ! அக்கா! அக்கா!' என்று வாய் விட்டு அலறினான். சோகப் புயலில் சிக்கியிருந்த தாமரை வேதனையிலிருந்து சிறிது விடுபட்டு வியப்பிலாழ்ந்தாள். செழியன், "அக்கா! அக்கா!' என்று அலறியதும் அவள் காதுகளையே அவளால் நம்ப முடியவில்லை. “என்ன?” என்று கூறியவாறு அவனையே பார்த்துக் கொண்டிருந் தாள். செழியனின் விழிகளிலிருந்து நீர் ஆறாகப் பெருகி வருவதை அங்கு எரிந்து கொண்டிருந்த தீப்பந்தங்களின் உதவியால் அவள் காண முடிந்தது. பெரிய புதிரை விடுவித்துத் தீர வேண்டிய கட்டத்தில் தாமரை இப்போது சிக்கிக் கொண்டாள். "என்ன சொல்கிறீர்கள்?" செழியனின் கண்களிலிருந்து பெருகும் நீர் அடைபடவில்லை. அவன் உதடுகள் மெதுவாக அசைந்தன. அக்கா! உங்கள் வாழ்வு முடிந்துவிட்டதா?" என்று மெல்லிய தொனியில் கூறிக் கொண்டான். 'என்ன சொல்கிறீர்கள்? என் அண்ணி உங்களுக்கு அக்காளா? வேளிர்குல மன்னனின் துணைவி உங்களுக்கு அக்காளா?" தாமரையின் கேள்வி எழுந்ததும், செழியன் தன்னைச் சமாளித்துக் கொண்டபடி, “ஒன்றுமில்லை.. ஏதோ நினைவு" என்று உளறினான். தாமரை அதைக் கேட்டு சமாதானமடையத் தயாராக இல்லை. "தயவு செய்து கூறுங்கள். பெருந்தேவியார் உங்கள் அக்காளா!" என்று கெஞ்சினாள். அதற்குச் செழியன் மௌனமாக இருந்தான். தன் அண்ணிக்கும் செழியனுக்கும் சகோதர உறவு இருக்கும் என்பதற்கான ஆதார ஏடுகள் ஒன்றன் பின் ஒன்றாக அவள் உள்ளத்தில் புரண்டன. செழியன் முகத்தையும், தன் அண்ணியின் முகத்தையும் மனக் கண்ணால் நினைத்து ஒப்பிட்டுப் பார்த்தாள். இருவரும் உடன் பிறப்பு என்பதற்கான ஒற்றுமை இருப்பதாகவே முடிவு கட்டினாள். அண்ணியார், எத்தனையோ தடவை, “தம்பி ஒருவன், அவன் எங்கேயிருக்கிறானோ? என்ன ஆனானோ?" என்று கண்ணீர் சிந்திக் கவலைப்பட்டது அவள் நினைவுக்கு வந்தது. பெருந்தேவியாரும், செழியனும் உடன் பிறப்புக்கள் தாம் என்று திண்ணமாக அவள் மனத்துக்குள் முடிவு செய்து கொண்டாள்.