பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

309


ரோமாபுரிப் பாண்டியன் 309 சுற்றுமே என்று பயந்து, மனைவியை அனுப்பி எதிரியைக் கொன்ற இருங்கோவேள் என்ற பழி என்னைத் தொடருமே என அஞ்சி, கரிகாலனைக் காப்பாற்றினேனே தவிர, உன் முயற்சி பட்டுப்போக வேண்டும் என்பதற்காக அல்ல! இன்பமே! அதற்காக என்னை மன்னித்துவிடு. விரைவில் புகார் நகரத்துக் கோட்டை முகப்பில் பறக்கப் போகிற வேளிர்குலத்துக் கொடியை, நீ இங்கிருந்தபடியே கண்டு மகிழலாம்." இப்படிச் சோகப் பெருமூச்சுக்கிடையே வஞ்சினம் கூறிய இருங்கோவேள், தன் துணைவியின் கல்லறை மீது கிடக்கும் மலர்களை எடுத்து முத்தமிட்டுவிட்டு மெல்ல நடந்தான். தன்னை யாரும் பார்க்கவில்லையென்ற நம்பிக்கையோடு நிம்மதியடைந்து திரும்பிய அவன் செழியன் ஒளிந்திருந்த மண்டபத்தைக் கண்டு விட்டான். அதற்குள்ளிருந்து யாராவது தன்னைக் கவனித்திருந்தால் என்ன செய்வது என்ற சந்தேகம் அவனுக்குப் பலமாகத் தோன்றிவிட்டது. அதனால் அந்த மண்டபத்துப் பக்கம் சந்தடியில்லாமல் நடந்து வந்தான். தானிருக்குமிடத்திற்கு இருங்கோவேள் வருவது கண்ட செழியன் எப்படித் தப்புவது என்று தெரியாமல் விழித்தான். அங்குமிங்கும் ஓடி, ஓர் ஆழமான கருங்கல் தொட்டிக்குள் இறங்கிப் பதுங்கிக் கொண்டான். தனக்கிருந்த பயங்கரமான எதிர்காலத்தை யெண்ணி நெஞ்சம் நடுங்கினான். கல்லறையில் வேளிர்குல மன்னன் உதிர்த்த வெறிபிடித்த வாசகங்களை நினைத்து நினைத்து கனல் மூச்சு விட்டுக்கொண்டிருந்தான். சிறிது நேரத்துக்குப்பிறகு மண்டபத்துக்குள் காலடி ஓசை கேட்டது. பிறகு சிறிது சிறிதாகத் தேய்ந்து மறைந்தது. "அப்பாடா போய்விட்டான்!" என்று செழியன் தலையை வெளியே நீட்டினான். அவனுடைய கழுத்தை ஒரு கரம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. தப்ப வழியின்றிச் சிக்கிக்கொண்டோம் என்றுணர்ந்த செழியன், நிமிர்ந்து பார்த்தான். வளவன் வேடத்தில் இருங்கோவேள்தான் நின்று கொண்டிருந்தான். அந்தி நேரத்து வானத்தகடுபோல் சிவந்திருந்த இருங்கோவேளின் முகத்தைச் செழியன் இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். தன்னை அவன் அடையாளம் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக மிகவும் சிரமப்பட்டு வேளிர்குல வீரனைப் போல் பாவனை செய்து கொண்டான். அதற்கேற்றாற்போல் இருங்கோவேளும் செழியனை இன்னாரென்று தெரிந்து கொள்ளாமல் தன் படைவீரன் என்றே நினைத்து, "ஏய்! எதற்காக