பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

311


ரோமாபுரிப் பாண்டியன் 311 'சரி! நீ புறப்படு - நான் போகிறேன். இரவு மறந்து விடாதே!" என்று கூறிவிட்டு இருங்கோவேள் அந்த இடத்தைவிட்டு அகன்றான். செழியனுக்குப் பலவிதமான குழப்பங்கள், அந்த குழப்பத்திலும் ஓர் ஆறுதல். கரிகால் மன்னனுக்கு வருகின்ற எந்த ஆபத்தும் அவனுக்குத் தெரியாமல் வரமுடியாதல்லவா? தன்னால் சோழ நாட்டுக்கு வரும் பயங்கரமான புயற்காற்றை அடக்கிவிட முடியும் என்ற துணிவு ஏற்பட்டது. அவனுக்கு தன்னைச் சுற்றி உருவாகும் சூழ்ச்சியில் தனக்கு முக்கியமான வேலை கிடைத்துவிட்டதாக அவன் நினைத்தான். அந்த எண்ணங்களினூடே, மெதுவாக அரண்மனை நோக்கி நடந்தான். இளவரசி தாமரையுடன் வந்திருக்கும் வீரன் என்ற காரணத்தால் யாரும் அவனைத் தடைசெய்யவில்லை. வீரர்கள் ஆங்காங்கு சூழ்ந்து நின்று பேசிக் கொண்டிருந்ததைச் செழியன் நின்று கவனிக்காவிட்டாலும் நடந்தவாறே தன் காதை அந்தப் பக்கம் திருப்பிடத் தவறவில்லை. எல்லா இடங்களிலும் பேசப்பட்ட விஷயம், தலைநகரத்து மக்கள் இன்னும் திரும்பி வரவில்லை என்பது தான்! 'மன்னன் கரிகாலன் சென்று அவர்களை இன்னும் அழைத்து வரவில்லை: மன்னனும் வந்து சேரவில்லை!' என்ற செய்தியை ஆளுக்கொரு விதமாக விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். செழியனுக்குக்கூடத் தலைநகரத்து மக்கள் காட்டிய எதிர்ப்பு உணர்ச்சி வியப்பையே அளித்தது. மக்களோ, தங்கள் மன்னன் அளவுக்கு மீறிய இரக்க உணர்வு கொண்டு பகைவர்களுக்குச் சோழநாட்டில் மரியாதை கொடுத்து விட்டான் என்ற குற்றச்சாட்டைக் கூறியவண்ணம் தலைநகரை விடுத்து நடந்துகொண்டிருந்தார்கள். அவர்களை அழைத்து வரப் புறப்பட்ட கரிகாலன். குதிரையொன்றில் வேகமாக அவர்களைத் தொடர்ந்து சென்றான். எளிதில் சந்திக்க இயலாதவாறு மக்கட்பெருங்கடல் தலைநகரைவிட்டு வெகுதூரம் சென்று விட்டது. கரிகாலன் ஒரு சிறு தவறு செய்துவிட்டான். சாலை வழியேதான் அவர்கள் சென்றிருக்கக்கூடுமென எண்ணி அவ்வழியே தன் குதிரையை முடுக்கிவிட்டதால் ஏமாந்து விட்டான். அவர்களோ சாலை வழி விடுத்துக் காட்டு வழியில் புகுந்து விட்டனர். அந்தக் காட்டு வழியும் இருங்கோவேள் மன்னனின் மரமாளிகை இருக்கின்ற வழியென்பது அவர்களுக்குத் தெரியாது.