பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரோமாபுரிப் பாண்டியன்

29


இருவர் அமர்ந்திருக்க - அன்று நடைபெற்ற அந்தப் பவனி கண்டு தமிழ்த் தரணியே வியப்பு மேலீட்டால் விழித்து நின்றது.

ஒரு யானையின்மீது சோழப் பேரரசன் கரிகாலன் வீற்றிருந்தான். அதனையொட்டி மெல்ல நடைபோட்டு வரும் மற்றொரு யானையின் மீது பாண்டிய நாட்டு வேந்தன் பெருவழுதி அமர்ந்திருந்தான்.

"வாழ்க கரிகால் மன்னர்"

"வாழ்க பெருவழுதிப் பாண்டியர்!"

"வளர்க சோழ, பாண்டியர் உறவு!" - என்ற முழக்கம் விண்ணதிரக் கிளம்பிற்று.

காவிரியாற்று நீரையள்ளித் தெளித்து விளையாடியவாறு பூம்புகாரின் வாலிபரும் மாதரும் விழாக்கொண்டாடினர். தெருவெங்கும் மலர்களைத் தூவினர். "தேன் தமிழ் வெல்க!" என்று கூவினர். எங்கு திரும்பினும் விழாக்காட்சி! இசை முழக்கம்! அகமுழவு எல்லாம் ஒலித்தன. இடக்கை, உடுக்கை, பேரிகை, படகம் எனப்படும் தோற்கருவிகள் அனைத்தும் ஆர்த்தெழுந்தன. குழல், வாக்கியம் என்னும் துளைக்கருவிகளும், சகோடயாழ், பேரியாழ், மகரயாழ் போன்ற நரம்புக்கருவிகளும் பவனியினூடே உற்சாகத்தை வாரியிறைத்துக் கொண்டிருந்தன. மக்களின் வாழ்த்துக்களைப் புன்னகையோடு ஏற்றுக் கொண்டு ஒருவரைப் பார்த்து ஒருவர் முறுவல் செய்தவாறு கரிகாலனும் பெருவழுதியும் யானைமீது கம்பீரமாக அமர்ந்திருந்தனர்.

அரசவீதிகளைக் கடந்து அணிதேர்ப்புரவி ஆட்பெரும் படையுடன் அழகுற நடந்த அந்தப் பவனியின் சிறப்பை எண்ணி எண்ணி மகிழ்ந்தனர், சோழநாட்டுத் தானைத் தலைவர்கள்.

சோழப் பெருங்குடி மக்கள் பாண்டியன் பெருவழுதியின் தோற்றங் கண்டு அவனுக்குத் தாங்கள் மரியாதை செலுத்தக் கடமைப்பட்டவர்களே என்பதை உணர்ந்தனர். எடுப்பான உடற்கட்டும் மிடுக்கான விழி நோக்கும் பெற்று, அகன்ற மார்பில் கொற்கை முத்துக்களால் கோத்த ஆரங்களை அணிந்து மணிமுடியின் மதிப்பைக் காப்பாற்றும் பெருமை வாய்ந்த வேந்தனே தான் என்று சோழர் குடியினர் எண்ணிப் புகழ்ந்திடுமளவுக்குப் பவனி வந்தான் பெருவழுதி.

"இமயத்தை முட்டிக் கலக்கிய தோள்களன்றோ அவைகள்! எதிர்த்து வந்த மன்னாதி மன்னர்களையெல்லாம் தூளாக்கிய வேலன்றோ கையில் பிடித்திருப்பது! நாடு காக்கும் மறக்குலத் தன்மையன்றோ முகத்தில் ஒளி விடுவது! இவரைத் தலைவனாகப் பெற்ற நாமன்றோ பெரும்பேறு