ரோமாபுரிப் பாண்டியன்
315
ரோமாபுரிப் பாண்டியன் 315 தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, அவனிடமிருந்து தான் அபகரித்த கட்டாரியின் துணையைத்தான் நாட வேண்டும் என்று முடிவு செய்தாள் முத்துநகை! பளபளவென மின்னிய அந்தக் கட்டாரியைத் தடவிப் பார்த்தாள் ஒருமுறை. "இது எத்தனையோ சோழ வீரர்களது உயிரைக் குடித்திருக் கும்; நாளையோ அல்லது மறுநாளோ செழியனின் மரணத்திற்கும் இதுவே கருவியும் ஆகலாம்; அதற்குள் என் இரத்தத்தை ருசிபார்த்துத் தன் மேல் படிந்திருக்கும் கறையைக் கழுவிக் கொள்ளட்டும்! செழிய னைப் போன்ற மாவீரர்களது இதயத்தில் இத்தகைய மாசு படிந்த கருவிகள் பாயக்கூடாது!" -முத்துநகையின் உதடுகள் இப்படி முணுமுணுத்தன! கட்டாரியைத் தன் மார்புக்கு நேரே தூக்கினாள். ஆனால் அதே நேரத்தில், இடியோசையைப் போல் எழும்பிய குதிரைகளின் குளம்படிச் சத்தம் அவள் செவிகளைத் தாக்கியது! உயர எழுந்த கரம், தானே சாய்ந்தது. பலகணி அருகே ஓடிச் சென்று வெளியே பார்வையைச் செலுத்தினாள்! குதிரையிலே வந்துகொண்டிருந்த சில வீரர்கள், அங்கே எதிர்பார்த்துக் காத்திருந்த அமைச்சர் செந்தலையாரின் அருகே வந்ததும் அவசரமாகக் கீழே குதித்தனர்.