ரோமாபுரிப் பாண்டியன்
321
ரோமாபுரிப் பாண்டியன் 33 321 "ஆ” என்று பேரிரைச்சலைக் கிளப்பினான். இருங்கோவேளிடமிருந்து அபகரித்த கட்டாரியை அவன் அடி வயிற்றில் பாய்ச்சிய முத்துநகை, கண்சிமிட்டும் நேரத்தில் சிட்டுப்போல் வெளியே பாய்ந்து ஓடினாள். சுற்றிக் கொண்டு கீழே சாய்ந்த வீரனின் கண் இமைகள் கடைசி முறையாக மூடுவதற்குமுன் பார்த்த பார்வையில் அவள் தென்படவே இல்லை. சோழப் பேரரசின் மேல் கொண்ட தாயகப் பற்றால் தவிர்க்க முடியாத இந்த இரண்டாவது கொலையையும் செய்துவிட்ட முத்துநகை, கூடாரங்களுக்கிடையே பதுங்கிப் பதுங்கிச் சென்றாள். அவள் மறுபடியும் ஆண் உருவம் பூணுவதற்காக உடைகளைத் தேடுவதில் அதிகச் சிரமப்படவில்லை. செந்தலையாரிடம் ஓடிவிட்ட வீரன் ஒருவனது கூடாரத்தில் துணிவுடன் புகுந்து தேவையானவற்றை எடுத்துக் கொண்டு அவைகளால் தன் உருவையும் முழுக்க முழுக்க மாற்றிக்கொண்டு, மீண்டும் வெளியே வருகிறநேரத்தில் செந்தலை யாரின் குரல் மறுபடியும் உரக்கக் கேட்டுக் கொண்டிருந்தது. அதன் பக்கம் தன் செவிகளைத் திருப்பிவிட்டுத் தப்பும் வழியில் பார்வையைச் செலுத்தினாள் முத்துநகை! "வேளிர்குடி வீரர்களே! வேளை வந்துவிட்டது உங்களுக்கு! நம் மன்னராம் இருங்கோவேளின் குடும்பத்தையே வேரோடு சாய்த்து, அதோ வெற்றிக்களிப்பால் கரிகாலன் எழுப்பும் சிரிப்பொலி கேட்கிறதா செவிகளில்? பின்னாலேயே எழும்புகிறது பாண்டியத் தளபதி நெடுமாறனின் குதூகலக் கூக்குரல்! அதற்கும் கணநேரம் உங்கள் காதுகளைத் திருப்புங்கள்! அதற்குள்ளே தான் மறைந்து கிடக்கிறது நம் மன்னர் எழுப்புகின்ற அபாயக் குரல்! அது மட்டுமா? வேளிர் குலத்து மணிமுடியை இடறிவிட்டு - மண் புழுதியை நம் வாழ்வில் அப்பி விட்டவர்களைப் பழி தீர்க்கப் புறப்படுவீர் என்று, அரசியாரின் மரணம் நமக்கு ஆணை இடுகிறது! வாழ்வெல்லாம் அனல்மேல் நின்றோம்! அணுஅணுவாகச் செத்தோம்! ஆசை படபடக்க - ஆவி துடிதுடிக்கக் காட்டிலே ஆட்சி நடத்தினோம்! நாகத்தால் விழுங்கப்பட்ட தவளை யெனத் தவித்தோம்! ஆகவே, சாகத் தான் வேண்டுமென்று துணிந்து விட்டவர்களே...! இனி மோதத்தான் வேண்டும் சோழ மண்ட லத்தோடு...!" -செந்தலையாரின் உணர்ச்சி முழக்கம் இப்போது போர்ப்பரணியாக மாறிக் கொண்டிருப்பதைக் கேட்ட முத்துநகை, தான் எதிர்பார்த்த அபாயம் உருவாகி வருகிறது என்று உறுதி செய்து கொண்டே கூடாரங்களின் இடையே மறைந்து மறைந்து ஓடிக் கொண்டிருந்தாள். “வீரர்களே! என்ன சொல்கிறீர்கள்? உன்னத நிலையில் இருந்தீர்கள் நீங்கள்! இன்று உருமாறிக் கிடக்கிறீர்கள்!