30
கலைஞர் மு. கருணாநிதி
பெற்றவர்கள்!" என்று கரிகால்மன்னவனைப் பவனியிலே கண்ட அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.
முதியவர் வாழ்த்தினர். இளையவர் தங்கள் நாடு வாழ்க என அதிர்ந்தனர்.
அரச வீதிகளிலே அழகேற்றியவாறு அந்த மன்னர்களின் ஊர்வலம் நகர்ந்தது மெல்ல மெல்ல!
இருபெரும் வேந்தர்களையும் நோக்கிய தலைநகரத்து மாந்தரது விழிகள், பாண்டிய மன்னனையொட்டி வெள்ளைப் புரவியொன்றில் அமர்ந்து வெற்றிப் புன்னகை காட்டியவாறு ஊர்வலத்தில் சென்ற பாண்டிய நாட்டு வீரன் ஒருவனைக் காணத் தவறவில்லை. அவன் குதிரையில் வீற்றிருந்த அழகே தனியாக இருந்தது. கடிவாளத்தைக் கரத்தில் ஏந்தியிருந்த பாவனையே எல்லோருடைய உள்ளத்தையும் கவர்ந்தது. சிறிய இளம் முறுக்கு மீசை, சுருண்டு காய்ந்த மிளகாய்கள் போலச் சுருள் சுருளான தலைமுடி! ஒவ்வொரு அசைவிலும் வீரந் துள்ளுவது போன்ற காட்சி! புன்னகையிலே ஒரு தனிக் கவர்ச்சி! யானைமீது வரும் அரசர்களையும் புரவிமீது வரும் அந்த வாலிபனையும் மாறி மாறிப் பார்த்தவாறு மக்கட் பெருங்கடல் உற்சாகத்தோடு நகர்ந்து கொண்டிருந்தது.
பட்டினப்பாக்கத்திலுள்ள புலவர் தெருக்களை அணுகியது ஊர்வலம். தமிழ் வளர்க்கும் காவலர்கள் அரசர்கட்கு மாலை அணிவித்து மகிழ்ந்தனர். அரசன் கரிகாலன் ஆவலோடு புலவர் கூட்டத்தை நோக்கினான்.
அவனது வாள் போன்ற கண்கள் அந்தக் குழுவில் யாரையோ மிக அக்கறையோடு தேடுகின்றன என்பதை தமிழ்ச் சான்றோர் புரிந்து கொண்டு, "என்ன மன்னவா?" எனக் கேட்டனர்.
கரிகாலன் கேட்டான், “காரிக்கண்ணனார் எங்கே?" என்று!
"அவர் தனது இல்லத்தின் வாயிலில் காத்து நிற்கிறார்” என்று பதில் மொழிந்தனர் புலவர்கள்.
காரிக்கண்ணனார் தனது வீட்டு வாயிற்புறத்தில் நின்று கொண்டிருந்தார். அவரது அகமகிழ்ச்சி முகத்தில் பீரிட்டெழுவது கண்டு கரிகாலன் நன்றியுடன் அவரைப் பார்த்தான். புலவரின் கண்கள் குளமாகிவிட்டன. அந்த ஆனந்தக் கண்ணீரில் ஒத்தியெடுக்கப்பட்ட இருமலர்களைச் சோழனுக்கும் பாண்டியனுக்கும் அளித்தார். மன்னர்கள் அவற்றைப் பெற்றுத் தம் மணிமுடியில் வைத்துக் கொண்டனர். எல்லாப் புலவரிடத்தும் காட்டுகின்ற அன்பையும் மரியாதையையும் விடக்