ரோமாபுரிப் பாண்டியன்
323
ரோமாபுரிப் பாண்டியன் 323 சொல்லும் நேரமும் இதுவல்ல! ஆகவே குழப்பத்தை மேலும் அதிகரிக் காமல், பெருந்தேவியாரின் சவ அடக்கமும் குலைந்துவிடாமல் அதே நேரத்தில் செந்தலையார் தலைமையில் புறப்படப் போகும் வேளிர்குடி வீரர்களின் போரையும் தடுத்து நிறுத்த என்ன வழி என்ற தீவிரச் சிந்தனையுடன், ஆண் வேடத்தில் பூம்புகார் நகரத்தில் புகுந்தாள் முத்துநகை! புகுந்த சில விநாடிகளிலேயே தலைநகரின் நிலையைக் கவனித்த அவள் நெஞ்சில், எல்லாவற்றையுமே சமாளிக்கக் கூடிய ஒரு புரட்சிகரமான திட்டம் உருவாகி விட்டது; அதை நிறைவேற்ற முத்துநகை மீண்டும் ஆண் வேடம் போட்ட தோடு மட்டுமில்லை; குரலை மாற்றிக் கொண்டாள்! பெயரை மாற்றிக் கொண்டாள்! மக்கள் மத்தியிலே புகுந்தாள். குமுறிக் கொண்டிருந்த மக்களிடையே ஒரு புதிரான திட்டத்தை வெளியிட்டாள். திடீர்த் தலைவன் ஆனாள்! யார் அந்தத் தலைவன்? கோச்செங்கணான் தான்! "மக்களை மன்னருக்கு எதிராகத் திருப்பிய அந்தப் புதிய தலைவன் யார்?" என்று அரண்மனையின் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் தீப்பொறி பறக்கப் பேசிய போது 'யார் அந்தக் கோச்செங்கணான்?” என்று கரிகாலன் கண்கள் சிவக்கக் கேட்ட போது, கோச்செங்கணான் என்று புதிய பெயருக்குள்ளே புகுந்து கொண்டிருந்த முத்துநகை தனக்கு ஆதரவாக மக்களைத் திரட்டிக் கொண்டிருந்தாள்! பெருந்தேவியாரின் சடலம் புதைக்கப்பட்டபோது, அந்தப் பெருங் கூட்டம் பூம்புகாரைக் கடந்து செல்ல அதற்குத் தலைமை தாங்கிச் சென்று கொண்டிருந்தாள்! மக்களைத் திரும்ப அழைத்துவர மன்னனே புறப்பட்ட போது கூட்டம் காட்டுப்பாதையில் அடியெடுத்து வைத்துக் கொண்டிருந்தது! ஏன்? சோழப் பேரரசோடு தன் உயிர் மூச்சைப் பிணைந்து விட்ட புலவரின் புதல்வி முத்துநகையின் மர்ம'மான திட்டத் திலேதான் இந்தக் கேள்விக்கு விடை அடங்கியிருக்கிறது!