பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332

கலைஞர் மு. கருணாநிதி


332 . கலைஞர் மு. கருணாநிதி எதிரியின் பாய்ச்சலைத் தடுக்கும் கேடயம் இல்லை அவர்களிடம். ஆனால், வேலா - வாளா - அமைதியுலகுக்கனுப்பும் சாவா - எதுவரினும் தடையில்லை; இடமுண்டு எம் நெஞ்சில் என்று வரவேற்புத்தரும் திறந்த மார்பகங்கள் தெரிந்தன! "வேளிர் குடியினரே! வெற்றி வாசல் திறந்துவிட்டது. நம்மை நோக்கி! சோழ மண்டலத்தின் சோற்றாலடித்த பிண்டங்கள் நம்மைத் தேடிவந்து தருகின்றன உயிர்களை; இனி நாம் அடிமையல்ல; வேற்றானை அண்டிக் கிடப்போரல்ல; இதை அந்த அக்கிரமக்கார அரசனுக்குத் தெரிவிக்க அறுத்துக் கொண்டு வாருங்கள் தலைகளை; பெருக்கெடுத்து ஓடச் செய்யுங்கள் இரத்த வெள்ளத்தை! பகை! பகை! பகை!" அந்தப் பெருங் கூச்சலிலே செந்தலையாரின் நெடிய குரல் எப்படித்தான் மற்றவர்களின் செவிகளில் பட்டதோ தெரியவில்லை. "தூள்! தூள்! தூள்!' என்ற முழக்கம் வானை முட்டியது! ஆனால் பூம்புகார் மக்களின் செவிகளிலே இத்தகைய போர்க்கள எச்சரிக்கை கேட்கவில்லை; போர்க் குரல் கொடுக்கும் தானைத் தலைவன் தான் மலைப்பாம்பின் பசிக்கு உணவாகும் நிலையில் கிடக்கிறானே! - ஆனாலும், அந்த இலட்சியவாதியின் வீர உரை பல்லாயிரம் மக்களைப் படையாகத் திரட்டிவந்த செயல் வீரனின் சிம்மக்குரல் அவர்கள் செவிகளில் ஒலித்துக் கொண்டுதான் இருந்தது. மன்னனுக்கு எதிராக அழைத்து வந்த மக்கள் வெள்ளத்தைப் போர் முகட்டுக்குத் திருப்பி விட, மரத்தின் மீது ஏறி நின்று அவன் கொக்கரித்த குரலை மீண்டும் கேட்பதாகத்தான் அவர்கள் உணர்ந்தார்கள். "இருங்கோவேளின் படையைச் சோழ நாட்டுப் படை வீரர்கள் எதிர்த்து முறியடித்தார்கள் என்று சொல்லும் போது ஏற்படுகிற பெருமையைவிட, அந்தப் படையைப் பூம்புகார் தலைநகரத்து மக்களே எதிர்த்து விரட்டினார்கள் என்று கூறும்போது தான் அதிகப் பெருமை என்று நான் கருதுகிறேன்..." ஆமாம். அந்தப் பெருமையைச் சூடிக் கொள்ள நாங்கள் தயார் இந்தப் போர்க்கதையைக் கேட்டுச் சோழப் பேரரசர் விடப்போகும் ஆனந்தக் கண்ணீரை இறுதிக் குளியலாக ஏற்றுக் கொள்ள எங்கள் சவங்கள் தயார் - போராடிக் கொண்டிருந்த பூம்புகார் மக்களின் வீரம் இதைத் தான் பறை சாற்றியது! உரம் வாய்ந்த உங்கள் வீரக்கரங்களே எதிரிகளின் தலைகளை அறுத்துத் தள்ளும் போர் வாட்களாக மின்னட்டும்!"