342
கலைஞர் மு. கருணாநிதி
342 கலைஞர் மு. கருணாநிதி எலும்புக் கூடாக, சிறைக் கதவாகச் செயலாற்றும் கண் இமையாகப் பிறவி எடுத்திருக்க வேண்டிய நீ - ஒரு பெண்ணாகப் பிறந்து விட்டது மாபெரும் குற்றமில்லாமல் வேறு என்ன?" முத்துநகை கொண்ட அதிர்ச்சி கணநேரத்தில் அளவிடற்கரிய ஆனந்தமாக மாறிவிட்டது! அவள் விட்ட மகிழ்ச்சிப் பெருமூச்சின் சூடு தாங்காமல் தானோ என்னவோ, பிணக்குவியலில் இரை தேடவந்த காட்டுக் கழுகுகள் கூடச் சற்று பின்னடைந்து போயின! "எனக்கு அந்தப் பெரும் பேற்றைத் தாங்கள் அளிக்கிறீர்களா மன்னவா?" "இதை விட உயர்ந்த முறையில் உன்னைப் பாராட்ட உன்னுடைய தியாகத்தைப் புகழ - உனது தந்தையைப் போல் நானொரு புலவராகப் பிறக்கவில்லையே என்று வருந்துகிறேன் அம்மா!" "போதும் அரசே! போதும்! இது ஒன்றே போதும்; நான் பிறவி எடுத்ததன் பயனைப் பூரணமாக அடைந்து விட்டேன்! பெண்ணாகப் பிறந்தவளின் வாழ்க்கையிலே வந்து போகும் பெருமைக்குரிய நாட்கள் இரண்டுதான் என்று நான் காவியங்களிலே படித்திருக்கிறேன்! நெஞ்சில் நிறைந்தவனுக்கு மாலை சூட்டும் திருநாளும்..." "பெற்றெடுத்த மழலைச் செல்வம் தன் மார்பில் புரளும் பெரு நாளும் என்று சொல்கிறாயா? சோழ மாதாவின் சுந்தரத் திருமார்பிலே உரிமையோடு புரளும் பெருமையை நீ ஏற்றுவிட்டதாகவும், அதைப் போலவே இன்று நீ காப்பாற்றிய சோழர் குலத்தின் மானம்தான் நீ பெற்றெடுத்த மழலை என்றும் சொல்கிறாயா? இல்லை, முத்துநகை! இரண்டே இரண்டு தினங்கள் மட்டுமல்ல உனக்குப் பெருமையைத் தேடித் தந்தவை! உயிரைப் பணயம் வைத்து நீ போராடிக் கொண்டிருந்தாயே, அந்த ஒவ்வொரு கணமும் உன் வாழ்வினிலே பெருமைக்குரிய நேரம், குறுகிய வாழ்வுக் காலத்திலேயே கோலூன்றும் முதியோரும் எண்ண முடியாதவற்றை நீ சாதித்துக் காட்டியிருக்கிறாய் அம்மா!" "இல்லை மன்னவா! இனிமேல்தான் பெரும்பகுதி பாக்கியிருக்கிறது! சோழ மண்டலத்தைச் சுற்றியிருக்கும் துரோகத்தை மறைத்திருந்த உடை மட்டுமே இப்போது அகற்றப்பட்டிருக்கிறது! இறைந்து கிடக்கும் இந்த பிணங்கள் - பெருகி ஓடும் இரத்த வெள்ளம் எல்லாமே அந்த அணிகலன்கள் தாம்! ஆனால் அந்தத் துரோகம் அழிக்கப்படவில்லை, துரோகத்திற்குத் துணையாக நிற்கும் வஞ்சக சக்தியும் முறியடிக்கப் படவில்லை."