பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

கலைஞர் மு. கருணாநிதி


தாரத்தையெடுத்து அவள் கரத்திலே தந்தார். அவள் அதை ஆசையுடன் வாங்கிக் கொண்டாள்.

"பாண்டிய நாட்டு முத்துக்கள் என்றாலே அவைகளுக்குத் தனி ஒளிதான்! இல்லையா அப்பா?" என்று கேட்டாள் முத்துநகை.

"ஆம் அம்மா! அதிலென்ன ஐயப்பாடு! கொற்கை முத்துக்களுக்கு ஈடான முத்துக்கள் உலகத்திலே வேறெங்கும் கிடையாது! ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன்பு, எகிப்து நாட்டை அரசாண்டு பரிதாபகரமாகச் செத்தும் போனாளே கிளியோபாத்ரா என்ற அழகி, அவளுக்கு இந்த முத்துக்கள் இல்லாவிட்டால் கள்ளே அருந்த முடியாதாம். மதுக் கிண்ணங்களில் இந்த முத்துக்கள் எழுப்பும் ஓசைதான் அவளுக்குப் பிடித்தமான சங்கீதமாம்! ரோமாபுரியிலே இருக்கிற மக்களுக்குப் பாண்டிய நாட்டு முத்துக்கள் என்றால் உயிர்! அவர்களது ஆடை அணிகள் ஒவ்வொன்றிலும் இந்த முத்துக்கள் சுடர்விட்டுக் கொண்டிருக்கின்றன!"

"ஏனப்பா! பாண்டிய மன்னருக்கும் சோழ மன்னருக்கும் இன்றைய தினம் நடைபெறுகிற நட்புறவு ஒப்பந்தம் வெற்றிகரமாக ஆகி விடுமல்லவா!"

"என்ன இப்படிக் கேட்கிறாய்? இப்படியொரு உறவு ஏற்பட வேண்டுமென்று மன்னர் கரிகால் திருமாவளவனை இத்தனை நாளும் வற்புறுத்தியதே நான்தான்! எனக்கு நம்பிக்கையிருக்கிறது, சோழர் பாண்டியர் உறவு நீடிக்குமென்று!"

"இந்த உறவை எப்படியும் முறித்துவிட வேண்டுமென்று யாரோ சில சிற்றரசர்கள் முயல்வதாகக் கூறினீர்களே!"

"அதெல்லாம் இனிமேல் முடியாது! உறுதிப்பட்டு விட்ட உறவு இது! நமது சோழ மன்னரிடம் தோற்றோடிப்போன சிற்றரசன் இருங்கோவேள் என்பவன்தான் ஏதாவது குந்தகம் விளைவிக்கக் கூடும். அதற்காக யாரும் பயப்படத் தேவையில்லை."

இதைக் காரிக்கண்ணனார் தன் மகளிடம் கூறிக் கொண்டிருக்கும்போதே தெருவிலே பெருத்த ஆரவார ஒலி கேட்டது. திடுக்கிட்டார் புலவர்.

முத்துநகை கதவுப்புறம் ஓடினாள்! ஓடியவள். "அப்பா! அப்பா! இங்கே வாருங்கள்!" என்று கூவினாள்.

புலவர் தெருப்பக்கம் விரைந்தார். தெருவிலே இரண்டு குதிரை வீரர்கள் ஆவேசமாகப் போரிட்டுக் கொண்டிருந்தனர். குதிரைகள்