346
கலைஞர் மு. கருணாநிதி
346 கலைஞர் மு. கருணாநிதி இருவருமே அந்த இருண்ட பகுதிக்குள்ளே நுழைந்தார்கள். பயங்கர மாகத் தோன்றிக் கொண்டிருந்த அந்த அறை, மலைக் குகையைப் போல் காட்சியளித்தது. சேறும் சகதியும் நிரம்பிய தரையில் இருவரும் மெதுவாக நடந்தார்கள். 'பூமியைக் குடைந்து அமைக்கப்பட்ட அந்தக் கொடிய சிறைச்சாலையில் செழியன் அடைபட்டுக் கிடக்கிறான். தன்னைக் காப்பாற்றிய காரணத்தால்' - என்று நினைத்த கரிகாலனின் மனம் அந்தப் பாண்டிய வீரனது தியாகத்தைப் போற்றியது. தன்னுடைய கால்களில் சரசரவென்று ஊர்ந்து சென்ற பெருச்சாளிகளைப் பற்றிக் கூட சிறிதும் கவலைப்படாமல் மேலும் நடந்தாள் முத்துநகை! சுவரோடு இணைக்கப்பட்டிருந்த விலங்குகளில் சிறைப்பட்டிருந்த சில சோழநாட்டு வீரர்களை அவர்கள் விடுதலை செய்தார்கள். தங்கள் வாழ்வு அந்த இருட்டறையோடு முடிந்துவிடும் என்று கருதிக் கொண்டிருந்த அந்த வீரர்கள் மன்னன் தங்களைத் தேடிவந்து விட்டதை எண்ணி மகிழ்ச்சியடைந்தார்கள். ஆனால் செழியனை மட்டும் அங்கே காணவில்லை! எல்லாருமே விடுவிக்கப்பட்ட பிறகு "யாரங்கே? இன்னும் இருப்பது யார்?” என்று குரலெழுப்பினாள் முத்துநகை. செழியன்! செழியன்!" என்று அதைத் தொடர்ந்து கரிகால் மன்னனும் கத்திப் பார்த்தான்! அவர்களது குரல்கள் தான் உட்சுவரில் மோதி எதிரொலித்தனவே தவிர, பதிலேதும் கிடைக்கவில்லை, மீண்டும் அப்படி அழைத்துக் கொண்டே நடந்த அவர்கள், கடைசியில் சிறைச் சாலையின் கோடிக்கே வந்து விட்டார்கள். சற்றுமுற்றும் தேடினார்கள். செழியன் அங்கே இல்லை! முத்துநகையின் முகம் ஏமாற்றத்தை உமிழ்ந்தது. தன்னுடைய கடமைப்பணி நிறைவேற முடியாமல் இன்னும் எதிர்ப்புச் சக்திகள் குறுக்கிடுகின்றனவே என்ற ஏக்கம் அவளது முகத்தில் பிரதிபலிப்பதைக் கரிகாலனால் அந்த இருட்டிலே தெரிந்து கொள்ள முடியவில்லை. "இங்கே செழியனைக் காணவில்லை! வெளியே செல்வோம் அரசே! என்றாள் முத்துநகை ருவரும் அதைவிட்டு வெளியே வந்தார்கள். மரமாளிகையைச் சுற்றியிருக்கின்ற பகுதிகளிலும் தேடி அலுத்தார்கள். பூம்புகாரிலே தாமரைக்குக் காவலனாக வேளிர் வீரனைப் போல் நடமாடிக் கொண்டிருக்கிற செழியனைக் காட்டிலே தேடி என்ன பயன்? "செழியன் எங்கே? - முத்துநகையின் உள்ளத்திலே தோன்றிய இந்த வினாக்குறி, மீண்டும் அவளிடம் ஒருவித உத்வேகத்தைத் தோற்றுவித்து