பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

349


ரோமாபுரிப் பாண்டியன் 349 மக்களின் ஆத்திரத்தைத் தணித்து, அவர்களைத் தலைநகருக்கு அழைத்து வரும் பொறுப்பை முத்துநகையிடமே ஒப்படைத்ததும் அவளுக்குத் தூக்கி வாரிப்போட்டது. பாழ் மண்டபத்துப் பக்கம் தான் காணும் உருவத்தைப் பற்றிய ஐயத்தை நீக்கிக் கெள்வதில் முழுக் கவனத்தையும் செலுத்தியிருந்த அவளுக்கு, இப்படி ஒரு வேலை கிடைத்தது. அதிர்ச்சியாகத்தான் தோன்றியது. ஆனால் அதிலேயும் அவளுக்கு ஒரு மகிழ்ச்சி. கரிகாலன் உடனடியாகத் தலைநகருக்குத் திரும்ப முடிவு செய்ததுதான். "முத்து நகை! நீ, ஆத்திரம் கொண்ட மக்களை அமைதிப்படுத்தித் தலைநகருக்கு அழைத்து வா; நான் முன்னே போகிறேன். மக்கள், என்னைவிட உனக்குத்தான் அதிகம் கட்டுப்படுவார்கள். ஏனெனில், அவர்களின் தலைவன் கோச்செங்கணான் அல்லவா?" என்று கூறியதும், மன்னனின் குதிரை புறப்பட்டது. குதிரை கண்களைவிட்டு மறையும்மட்டும் பார்த்துக் கொண்டிருந்து விட்டு முத்துநகை, மண்டபத்துப் பக்கம் திரும்பினாள் தன் இலட்சிய உருவம் இதயத்து நிழலில் அங்கேயே நின்று கொண்டிருப்பதாகவே உணர்ந்தாள். தொலைவில் விண்ணைத் தொடுமளவுக்கு எரிந்து கொண்டிருந்த நெருப்பின் ஆவேச நடனத்தைப் பற்றி அவள் கவலைப்படவில்லை. அதைவிட அதிகமாகத் தன் உள்ளத்தில் தீ மூண்டுவிட்டதே என்ற கவலை அவளை அலைக்கழித்தது. மண்டபம் நோக்கி அவள் கால்கள் நடந்தன. கண்களோ கால்களை வெற்றி கண்டன. எல்லா அங்கங்களையும் இதயம் வெற்றி கண்டு ஜெயக்கொடி போட்டது. மண்டபத்தருகே அவள் வந்துவிட்டாள். எதிரே இருப்பது வீரபாண்டியேதான்! ஆனால் அவளால் நம்ப முடியவில்லை. மூட நம்பிக்கை. முழு பலத்தோடு அவளைக் கட்டித் தழுவிப் பகுத்தறிவின் கற்பை அழிக்கும் மிருக முயற்சியிலே ஈடுபட்டது. "அத்தான்! அத்தான்! அவரில்லை! பேய்! பூதம்! பிசாசு! என்று அவளறியாமலேயே கத்திவிட்டாள். கத்தும் பொழுதே அவளுக்குக் கண்கள் இருண்டுவிட்டன. வீரபாண்டி, "முத்து!' எனக் கூவி அவளருகே தாவிப் பாய்ந்தான். அவன் வருவதைக் கண்டு இன்னும் அதிகமாகப் பயந்து விட்ட முத்துநகையின் நெஞ்சு அடைத்துக் கொண்டது; தலை சுற்றியது. 'தடால்' என்று கீழே விழப் போனவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான். வீரபாண்டி. மயங்கிய நிலையில் பிரக்ஞையிழந்து அவன் மேல் சாய்ந்து கிடந்தாள் கடமையாற்றும் அந்தக் கண்மணி.