பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358

கலைஞர் மு. கருணாநிதி


358 கலைஞர் மு. கருணாநிதி அவள் உடலிலே ஏற்பட்ட சோர்வும், உள்ளத்திலே ஏற்பட்ட வேதனை யும், இப்போது சென்ற இடம் தெரியவில்லை. புத்துணர்ச்சி பெற்றவ ளாய் வேகநடை போட்டாள். அவளது நடையழ கையும் முதுகின் எழிலையும் சுவைத்தவாறு நின்ற இருங்கோவேள், மரங்களுக்கிடையே மறைந்ததும் உணர்வு பெற்றவனாய்த் தன் மாளிகையிருந்த திக்கை நோக்கினான். பொறாமைக்காரர்களின் உள்ளம் போல் எரிந்து அடங்கிப் புகைந்து கொண்டிருந்த மரமாளிகையின் முடிவு பற்றி எண்ணிப் பார்க்கவும் முடியாத அளவுக்கு மனம் வெறிச்சோடிப் போயிருந்தது. சோழ மண்டலத்திலே வசிக்கின்ற ஈ, எறும்பு, காக்கைக் குஞ்சுகளுக் குக்கூடத் தெரியக்கூடாது என்பதற்காக வன விலங்குகளுடன் போராடி அமைக்கப்பட்ட அரண்மனையல்லவா அது? காட்டுக்குள் இடம் அமைத்துக் காரியத்தை முடித்துக் கொண்டு விடலாம் என்ற அவனுடைய தீர்மானமும் மாளிகைக்கு ஏற்பட்ட முடிவையே அடைந்து விடுமோ என்ற எண்ணம் ஏனோ அவன் மனத்திலே தோன்றியது. இருந்தாலும், அவனுடைய விழிகள் அங்கிருந்து இடம் பெயரச் சற்று நேரம் பிடித்தது. அந்தத் துன்பக் காட்சியைப் பார்த்தவாறே பெரும்புதர்களுக்கு மறைவில் கட்டப்பட்டிருந்த குதிரையிடம் சென்றான். அதனைத் தட்டியவாறு ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நின்றான். அவன் முகத்தில் இப்போது காதல் பொலிவுமில்லை - சோகத்தின் சாயலும் இல்லை. எல்லாம் மறைந்து ஒரு வெறிக்கூத்து ஆரம்பமாகிவிட்டது. குதிரையில் பாய்ந்து ஏறினான். வேறு வழியாகப் பூம்புகார் நோக்கிப் பறந்தான். அடர்ந்த காட்டுப் பகுதியொன்று கோட்டைச் சுவர் போல இருமருங்கிலும் மறைந்திருக்கும் நெருக்கமான மரங்கள்! புதர்கள்-நச்சுக் கொடிகள் நிறைந்த பயங்கரமான இடம். அதற்குள்ளே புகுந்த இருங்கோவேளின் குதிரை வெகு நேரம் வரையில் வெளிவரவில்லை. அந்த ஆபத்தான இடத்தில் வழி தெரியாமல் திண்டாடுகிறானா? அல்லது குதிரை அந்த இருட்டில் கீழே விழுந்து விட்டதா? இல்லை; இல்லை! அதோ வந்துவிட்டது குதிரை! இப்போது அதன்மீது அமர்ந்திருப்பவன் யார்? இருங்கோவேளா? அல்ல! அல்ல! கரிகாலனைக் காப்பாற்றிய அந்த உழவர் பெருமகன் வளவனல்லவா அமர்ந்திருக்கிறான்?