364
கலைஞர் மு. கருணாநிதி
இரவு தன்னை வந்து சந்திக்கும்படி எதற்காக இருங்கோவேள் கூறியிருப்பான் என்ற குழப்பத்தோடு பூம்புகார் அரண்மனைக்குள் நடைபோட்டுக்கொண்டிருந்த செழியனின் காதில், மரமாளிகையின் மீது சோழப் பெருங்குடி மக்கள் நடத்திய போரும் அதில் பெற்ற வெற்றிச் செய்தியும் எட்டிவிட்டன. அந்தச் செய்தியை இளவரசி தாமரையிடம் அறிவித்தால் என்ன பாடுபடுவாள் என்ற ஆழ்ந்த இரக்க உணர்வும் அவன் இருதயத்தில் பொங்கியது. இருங்கோவேளின் பழிவாங்கும் உணர்ச்சி உச்சக்கட்டத்திற்குச் செல்லப் போகிறது. வெகுவிரைவில் அவனது வெறித்தனமான தாக்குதல் கரிகால் மன்னன் மீது ஆரம்பமாகி விடும் என்று பயந்தான் அந்தப் பாண்டியகுல வீரன். தனக்கு ஏற்பட்டிருக்கிற சோதனை நிறைந்த நேரத்தை அவன் நினைத்து நினைத்து மனம் புழுங்கினான். அரண்மனைக்குள் நுழைந்தி ருக்கிற ஆபத்துக்களை அரசனிடம் தெரிவித்து விடலாம் என்றாலோ, அவன் தாமரைக்குத் தந்த உறுதிமொழியை மீறியவனாகி விடுவான். வேளிர்குல வீரன் என்ற நிலையில் கரிகால் மன்னனிடம் ஆபத்தினை விளக்கினாலோ அவன் நம்பப்போவதில்லை. வாக்குறுதியைக் காப்பாற்றுவதா? வான் புகழ் கொண்ட மன்னரைக் காப்பாற்றுவதா? இரண்டு கடமைகளையும் செய்து முடிப்பதே உண்மையான வீரனுக்கு அழகு என்று அவன் மனச்சாட்சி கூறியது. தானே தனியாக நின்று மன்னரைக் பாதுகாப்பது என்ற முடிவுடன் அரண்மனையில் திரிந்து கொண்டிருந்தான். அவன் கால்கள் நான்கு திசையிலும் சுழன்றவண்ணமிருந்தன. எந்த ஒலியையும் கூர்ந்து கவனித்து ஆராய்ந்தன செழியனின் செவிகள். இரவு இருங்கோவேளைச் சந்திப்பதாலேயே மன்னனுக்கு ஏற்பட இருக்கும் படுநாசத்தைத் தடுத்திட முடியுமென்று அவன் நம்பினான். தாமரை தன்னைத் தேடிப்பார்த்துக் கிடைக்காத காரணத்தால், சந்தேகப்பட்டு விடக் கூடாதேயென்று நினைத்து அவள் இருக்குமிடம் நோக்கிச் சென்றான். அரண்மனைக்குள் வந்தது முதல் யாருடைய தடையுமின்றி விருப்பம் போல் எல்லா இடங்களிலும் திரிந்து கொண்டிருந்த அவனுக்குத் திடீரென ஓர் அதிர்ச்சி ஏற்பட்டது. அவனை யாரோ கவனிப்பது போன்ற ஒரு