ரோமாபுரிப் பாண்டியன்
367
ரோமாபுரிப் பாண்டியன் 367 தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். தாழ்வாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த தூண் ஒன்றின் ஓரத்தில் வட்ட வடிவமாகச் செதுக்கப்பட்டிருந்த ஒரு பீடத்தில் செழியன் உட்கார்ந்து சிந்தனைத் தேரைச் செலுத்திக் கொண்டிருந்தான். மெய்க்காவலன் அவனையே உற்று நோக்கியவாறு பூனைபோல் அடியெடுத்து வைத்துத் தூணின் அருகே தொங்கிக் கொண்டிருந்த இரும்புச் சங்கலியொன்றைப் பிடித்துக் கொண்டான். அந்த இரும்புச் சங்கிலியைப் போலவே அங்கு பல சங்கிலிகள் தொங்கி அந்த தாழ்வாரத்திற்கு எழில் தந்து கொண்டிருந்தன. ஆனாலும் மெய்க்காவலன் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தான். செழியனோ கண்களை மெதுவாக மூடிக்கொண்டு தன் முன்னே காத்திருக்கும் பொறுப்புகளோடு போராடிக் கொண்டிருந்தான். செழியன் அமர்ந்திருந்த இருக்கை மெல்ல மெல்ல அசைந்தது. மெய்க்காவலனின் கையிலிருந்த சங்கிலி தரையை நோக்கித் தாழ்ந்தது. செழியன், பீடத்துடன் கீழே போய்க் கொண்டிருப்பதை உணர்ந்தான். தாழ்வாரத்திலிருந்து இருள்நிறைந்த பூமியைக் குடைந்து கொண்டு எங்கேயோ போவது போன்ற திகில் அவனைப் பற்றிக்கொண்டது. கீழே கீழே அவனால் எண்ணமுடியாத அளவுக்குக் கீழே-பீடம் பயணம் நடத்துகிறது.கூச்சலிடவோ, அங்குமிங்கும் ஆடியசைந்து உடலைக் காயப்படுத்திக் கொள்ளவோ விரும்பாமல் மனத்திடத்தோடு இருந்தான் செழியன். கீழ்நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த இயந்திர இருக்கை தடால் என்ற ஒலியுடன் ஓர் இடத்தில் முட்டியது. செழியன் சுற்றும் முற்றும் பார்த்தான். முதலில் இருந்த அடர்ந்த இருள் இப்போது இல்லை. மங்கலான ஒளி பரவிக் கொண்டிருந்த ஓர் இடத்திற்கு வந்திருப்பதாக உணர்ந்தான். இயந்திர இருக்கையை விட்டு இறங்கி மெல்ல அடிவைத்து அந்த இடத்தை ஆராய்ந்தான். அவன் இறங்கியதும் அந்தப் பீடம் மேலே போய்விட்டது. அதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் எங்கே வந்திருக்கிறோம் என்ற தீவிர யோசனையில் ஈடுபட்டு மங்கலான ஒளி வழங்கும் விளக்கினிடம் சென்றான். அங்கே யாரோ ஒருவர் அமர்ந்திருப்பது தெரிந்தது. விளக்கடியில் உட்கார்ந்திருப்பது யார்? அருகே சென்று பார்க்கலாமா? அதற்கு அவனுக்குத் துணிவு வரவில்லை. எத்தனையோ பொறுப்புகளைச் சந்திக்க வேண்டிய சமயத்தில் இப்படி ஒரு பயங்கரமான தடை வந்து விட்டதே என்று அவன் ஆயாசமடைந்தான். 'விளக்கடி உருவம் எத்தகைய விளைவுகளுக்குக் காரணமாக இருக்குமோ? என்னென்ன வேதனைகள் ஏற்படுத்துமோ?' என்றெல்லாம் குழம்பினான்.