பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

369


ரோமாபுரிப் பாண்டியன் 369 நிலைமைகளைச் சமாளிப்பதற்கு மன்னன் மேற்கொள்ளும் முறைகள் கூட அவனுக்குப் பெரும் வியப்பை அளித்த வண்ணமிருந்தன. ஆற்றல் மிக்க படைவரிசைகளைக் கொண்டிருந்தும், அவைகளைப் பயன்படுத்திப் பகைவன் இருங்கோவேளைப் பிடிக்கவோ, அழிக்கவோ அவர் முயற்சியெடுக்கவில்லை. சோழநாட்டின் படைகள். சேர-பாண்டியர் படைகளைக் காட்டிலும் தொகையிலும் வலுவிலும் எத்தனையோ மடங்கு உயர்ந்தவை. ஆனால் அந்த பெரும்பலம் கொண்டு இருங்கோவேளின் படைகளைச் சூழ்ந்து எதிர்த்து அவன் இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடலாம். அதுபற்றிக் கரிகாலன் சிந்தித்ததாகவே தெரியவில்லை. பாண்டிய நாட்டுப் படையெடுப்பில் அவனைக் கைது செய்து இழுத்துச் செல்லலாம் என எண்ணியதும் பாழாகும் அளவுக்கு அந்தச் செழியன் இருங்கோவேளின் கைப்பாவையாகி விட்டான். இருங்கோவேளின் துணைவி கொலைகாரியாக மாறி கொலுமண்டபத்திற்கு வந்தபிறகு, மன்னனின் பெருந்தன்மை மேலும் வளர்ந்ததே தவிர, பகையுணர்வுகொண்டு பழிகாரர்களைத் தொலைத்துக் கட்ட அப்போதும் எழுந்தானில்லை. அவனே குறி வைக்கப்படுகிறான். அவன் உயிருக்கே ஆபத்து. அந்தச் சமயத்திலும் முகத்தில் கோபம் பொங்கிடவில்லை. சிந்தனை ரேகைகள்தான் விழுகின்றன. அமைதி யாகக் காரியங்களில் ஈடுபடுகிறான். ஆர்த்தெழுந்து படைதிரட்டிப் பகைப்புலம் அழிக்கப் புறப்படுகின்றா னில்லை. ஒருவேளை போர்த்தொழில்கூடாது எனும் புதிய தத்துவ உபதேசத்தை நாட்டுக்கு வழங்கப் போகிறானா? படைகளைக் கலைத்துவிட்டுப் பெருந்தன்மை, அன்பு, அடக்கம் ஆகியவற்றைக் கொண்டு நாடாளப்போகிறானா? இந்தப் புதிய போக்குக்கான காரணத்தை எப்படியும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றெல்லாம் நினைத்துக் கிளர்ந்த நெடுமாறனுக்கு காரிக்கண்ணனார் பற்றிய விளக்கமறிய வேண்டுமென்ற ஆவலும் நெஞ்சைப் பீறிக் கொண்டு கிளம்பிற்று. கரிகாலனிடமிருந்து தனக்குச் செய்தி கொண்டுவந்த போது அந்தப் புலவர் மன்னனிடம் காட்டிய அன்பும், மரியாதையும், நாட்டுப்பற்று மிக்க பேச்சும் நெடுமாறனைப் பெரிதும் கவர்ந்திருந்தன. அத்தகைய தமிழ்ச் சான்றோருக்கு இந்த முடிவு ஏற்படுவானேன் என்று அவன் சிந்தித்துக்கொண்டிருந்தபோது உருத்திரங்கண்ணனாரின் வருகையும் காரிக்கண்ணனார் பற்றி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று அவர் காட்டிய பரபரப்பும் அவன் முயற்சியைத் தீவிரமாக்கின. ஆனால் அரண்மனையில் இருந்த நெடுமாறனுக்கும் கடியலூர்ப் புலவருக்கும் கிட்டாத வாய்ப்புச் செழியனுக்குக் கிட்டிவிட்டது.