370
கலைஞர் மு. கருணாநிதி
370 கலைஞர் மு. கருணாநிதி மாமன்னனின் ஆணைப்படி மெய்க்காவலன், செழியனை வட்டமிடத் தொடங்கினான். அவனைச் சுற்றியலைந்து செய்தி கொண்டு வருவது மட்டுமல்ல; அவனுக்கும் பூம்புகார் அரண்மனையில் யார் யாருக்கும் தொடர்பு இருக்கிறது என்று ஆராய வேண்டிய பணியும் மெய்க்காவலனுக்குத் தரப்பட்டிருந்தது. அதனால்தான் அவன் வேளிர்குல வீரன் உடையில் இருந்த செழியன் தற்செயலாகப் பீடத்தில் உட்கார்ந்த போது எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பினைப் பயன் படுத்திக்கொண்டு இயந்திரச் சங்கிலியை இழுத்துப் பீடத்தைக் கீழ்நோக்கித் தள்ளி அங்குள்ள மாளிகைக்குள் அவனை விட்டான். அங்கே செழியன் யாரைச் சந்தித்தான்? விளக்கடியில் உட்கார்ந் திருந்தது யார்? திரும்பியவாறு கையிலேயிருந்த ஓலைச் சுவடியையும், எழுத்தாணியையும் பார்ப்பதற்கு முன்பு செழியன் கண்டது. விரிந்த ஓலைச் சுவடி போல் நெற்றியும், எழுத்தாணிபோல் கூரிய விழிகளும் படைத்த காரிக்கண்ணனாரின் முகத்தைத்தான். ஆம், அந்தப் புலவர்தான் விளக்கடியில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். அவர் நாட்டுத் துரோகியெனக் குற்றஞ் சாட்டப்பட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தாலும் தமிழ்ப் புலவருக்குரிய எல்லா மரியாதைகளுடனும் அங்கு நடத்தப்பட்டார். எந்த வசதிகளும் குறைக்கப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால், அவர் வீட்டில் இருந்ததை விட அதிகப்படியான வசதிகள் அங்கே செய்யப்பட்டிருந்தன. எத்தனை வசதிகள் இருந்தால் என்ன? அவர் மீது கூறப்பட்டுள்ள குற்றம் அவரை அணுஅணுவாகக் கொன்று கொண்டிருக்கிறதே! இந்த நாட்டின் நல்வாழ்வு தவிர வேறெதுவும் தேவையில்லையென முடிவு கட்டிக் கிளம்பிவிட்ட இந்த முத்துநகையின் தந்தை துரோகி! சோழ மண்டலத்தைப் பகைவனுக்குக் காட்டிக் கொடுக்கும் பாவி. கரிகால் மன்னனின் உயிருக்கு உலைவைக்கப் புறப்பட்டிருக்கும் கயவர்களுக்குத் துணை: எந்தச் சோழநாட்டு மண்மீது சுந்தரத் தமிழ்க் கவிதைகள் இயற்றினாரோ அந்தச் சோழநாட்டுக்கு அழிவு தேடித்திரியும் அக்கிரமக்காரர். இப்படி முத்துநகை தனக்கு நேராகத் தேன்மொழி சிந்தும் நாவால், தேளெனக் கொட்டியதை அவரால் மறக்க முடியுமா? அந்தச் சொற்கள் அவரது உள்ளத்தை எருமைகள் புகுந்த தாமரைக் குளம்போல் ஆக்காமலிருக்குமா? வணக்கத்துக்குரிய தமிழ்ப் பாவாணரே! நானொருவன் வாழ்வது பிடிக்கவில்லையென்றால் என் மார்பில் வேல் நுழைத்திருக்கலாம்.