384
கலைஞர் மு. கருணாநிதி
384 கலைஞர் மு. கருணாநிதி வாரியாக அது என்ன சுவடியென்று பார்த்து விடலாமே யென்று மெல்ல நடந்து அருகே வந்தார். ஓலைச் சுவடியைக் கூர்ந்து கவனித்தார். 'ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த" என்ற தமிழ்வரி அவர் கண்ணில் பட்டது. உணர்ச்சி கொண்டார். தமிழ் நூலே அந்தச் சுவடி: அரசியல் நிலைகுறித்த ஓலையல்ல என்று முடிவு செய்து அதனைக் கையில் எடுத்துக் கொண்டார். மெதுவாக அந்த இடத்தைவிட்டு நகர்ந்து மன்னனுக்குத் தலைப்புற மாக ஒதுங்கி நின்று ஓலையைப் புரட்டிப் படிக்கத் தொடங்கினார். செழியன் படித்துச் சுவைத்த அதே பாடலை அவரும் படித்துச் சுவைத்து மகிழ்ந்தார். பாட்டின் இறுதியில் காரிக்கண்ணனார் என்றிருந்த எழுத்துக்களைப் பார்த்ததும் அவருக்கு உற்சாகம் தாங்கவில்லை. ஆயினும் ஆவலையும் துடிப்பையும் பெருமகிழ்ச்சி யினையும் அடக்கிக்கொண்டு அடுத்த ஓலையைப் பிரித்தார். அதற்குள் ஒரு குரல் அவர் செவியைத் தாக்கிச் சிந்தையில் சூடேற்றி அவரைச் செயலிழக்க வைத்துவிட்டது! "புலவரே மனதுக்குள் படிக்காதீர்கள். வாய்விட்டு என் காதில் விழும்படி உரக்கப் படியுங்கள்!' இந்த வார்த்தைகள் அவர் காதில் விழுந்ததுதான் தாமதம்! அந்த மாளிகையில் உள்ள எல்லாப் பொருள்களுமே சுற்றுவதுபோல் தெரிந்தது, உருத்திரங்கண்ணனாருக்கு! குரல் வந்த திசை நோக்கித் திடுக்கிட்டுத் திரும்பினார் புலவர். அவர் மேனி நடுங்கிற்று; நாக்குழறிற்று. மன்னன் கரிகாலன் புன்னகையுடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த இதழோரச் சிரிப்பிலே இயற்கையான அழகைப் புலவர் காணவில்லை. வலிந்து சிரிப்பதுபோல் அவருக்குத் தோன்றிற்று. கரிகாலனின் கண்கள் சிவந்திருந்தன. அதையும் அவர் கவனிக்கத் தவறவில்லை. அடுத்து என்ன பேசப்போகிறானோ என்ற அச்சத்துடன் பயங்கரமான அமைதியினிடையே இருளில் அகப்பட்ட சிறு குழந்தைபோல் தவித்துக் கொண்டிருந்தார். அவர் கையிலிருந்த ஓலைச்சுவடி பிரிந்து கயிற்றில் தொங்கிக்கொண்டிருந்தது. மெத்தச் சிரமப்பட்டு நா அசைத்தார். "அரசே!' என்ற அழைப்புடன் நாக்கு வாய்க்குள் போய் ஒட்டிக் கொண்டு விட்டது. புலவரின் நிலையை நன்றாகப் புரிந்து கொண்ட கரிகாலன், "ம்! பரவாயில்லை! படியுங்கள்!" என்று அன்பு கனிந்த மொழியில் கூறினான். அதுவும் புலவரை வேலெனத் தாக்கியது. "என்னை மன்னித்திடுக மன்னா! என்றவாறு அவனருகே ஓடி வந்தார் அவர்.