ரோமாபுரிப் பாண்டியன்
395
ரோமாபுரிப் பாண்டியன் 395 "மலர்ப் படுக்கையில் படுத்திருக்கும்போது திடீரென அது முட் படுக்கை ஆகிவிட்டால் என்ன செய்வாய்?" "இப்போது மட்டுமென்ன, நீங்கள் இல்லாமல் நான் தனியாகப் படுத்திருக்கும்போதெல்லாம் முட்படுக்கையில் தானே கிடப்பதாக உணர்கிறேன்.!' "தேனைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாய்-திடீரென அது நஞ்சாகி விடுகிறது. அப்போது என்ன செய்வாய்?" "மாற்றம் தேனிலே இல்லை! நம் மனத்திலேதான் இருக்கிறது. அத்தான், நினைவுதான் தேனைக் கூடத் தேளின் நஞ்சாகக் கருதச் செய்கிறது என்று என்னை நானே தேற்றிக் கொள்வேன்!" "நீ என்னை முழு மனத்தோடு நம்பிக் காதலிக்கிறாய்... "காதலிக்கிறேனா? காதலித்து முடிந்து விட்டது!” 11 'அடடா! இரு-குறுக்கிட்டுக் குழப்பாதே! சரி, காதலித்து முடிந்து விட்டது! ஒருநாள், நான் உன்னுடைய பகைவன் என்று தெரிந்து விட்டால் என்ன செய்வாய்? "இப்படியெல்லாம் சொல்லி என்னைப் பிரித்துவிடப் பார்க்கிறீர்களா? நீங்கள் எந்தப் பொய் சொல்லியும் என்னை ஏமாற்ற முடியாது! செம்புலப் பெயல்நீர் போல அன்புடைய நெஞ்சம் கலந்துவிட்ட பிறகு அதனைத் துண்டாட நினைக்கும் யாரும் வெற்றி பெற முடியாது என்கிறபோது அடித்தளமற்ற உங்கள் பொய்கள்தானா வெற்றி பெற்றுவிடும்?" "இல்லை முத்துநகை! என்னைப் பார்? என் மேனியெல்லாம் நடுங்குவதைப்பார்! குத்தீட்டிகளும், கொலை வாட்களும் சூழ்ந்து வந்தபோதும் பயத்தால் துடிக்காத என் இதயம் படபடவென்று அடித்துக் கொள்வதை உன் மென்மையான கரத்தால் புரிந்து கொள்! இத்தனை நாள் உன்னை நான் ஏமாற்றி வந்தேன். என் பகைவனை அழிப்பதற்காகப் புறப்பட்ட இலட்சியப் பயணத்தில் உன்னைச் சந்தித்தேன், உள்ளத்தைப் பறிகொடுத்தேன், இனி நாம் பிரிய முடியாது." இருங்கோவேள் குழந்தையைப் போல் ஓவென அழுதான். முத்துநகை திகைப்படைந்து அவன் முகத்தோடு முகம் புதைத்துக் கொண்டு, "அத்தான்! என்ன சொல்கிறீர்கள்? பகைவன் இருங்கோ வேளை அடக்கவந்த உங்களுடைய பாதையில் நான் குறுக்கிட்டது பெருந்தவறு என்று கருதுகிறீர்களா? என்மீது தாங்கள் கொண்ட காதலால் தங்களுக்கும் நாட்டுக்கும் ஏற்பட்ட இழப்பு என்ன அத்தான்? சொல்லுங்கள் அத்தான்!" என்று கண்ணீர் வடித்தாள்.