396
கலைஞர் மு. கருணாநிதி
396 கலைஞர் மு. கருணாநிதி "நீ கருதுகிறபடி என் பகைவன் இருங்கோவேள் அல்ல; நானும் வீரபாண்டி அல்ல. வீரபாண்டி என்ற பெயரால் உன்னை இதுவரை வஞ்சித்து வந்தேன். முதலில் உன்மீது ஆசை கொண்டேன். உன் தங்க உடல் என்னை உன் அடிமையாக்கியது. பிறகு உன் உள்ளத்தை உணர்ந் தேன். காதல் கொண்டேன். நீயே என் மனைவியென்று தீர்மானித்து விட்ட பிறகு, கணவனின் காரியங்களுக்கு மனைவியும் உதவியாக இருக்கவேண்டுமென்ற இலக்கணப்படி என் பகையழிக்கும் திட்டத்துக்கு உன்னையும் பயன்படுத்திக் கொண்டேன்!” "அய்யோ! என்னத்தான் சொல்கிறீர்கள்; என் நெஞ்சு வீங்குகிறதே! பேசாதீர்கள்! அத்தான் பேசாதீர்கள்! என் நெஞ்சு வெடித்துவிடும்! "முத்துநகை! நுனிநாக்கு வரையில் வந்து உதட்டுக் கதவுகளையும் திறந்துவிட்ட உண்மை இனிமேல் உள்ளே திரும்புவது சிரமம் மிச்சத்தையும் கேள்! உன்னைக் கொண்டே என் பகைவனைச் கொல்வதற்கும் இறுதியாகத் திட்டமிட்டு விட்டேன்! "யார் உங்கள் பகைவன்? நீங்கள் யார்? தெளிவாகச் சொல்லுங்கள் அதுவும் விரிவாகச் சொல்லுங்கள்" என்று சத்தம் போட்டுக் கத்தினாள் முத்துநகை. "என் பகைவன் கரிகாலன்! நான் தான் இருங்கோவேள்!" இந்த வார்த்தைகளைக் கேட்ட முத்துநகை "ஆ" என்று அலறி யெழுந்த காட்சி, திடுமென வெடித்து நெருப்புக் குழம்பு கக்கும் எரிமலையை ஒத்ததாக இருந்தது. உறையினின்றும் வெடுக்கெனக் கிளம்பிய வாள்போல்-வில்லி லிருந்து விடுபட்ட கணை போல்-அவன் மடியைவிட்டு எழுந்த முத்து நகையின் கையைப் பிடித்தவாறு, இருங்கோவேள், "பகைவனா யினும் உன்னிடம் பாசமுள்ளவன் நான் கண்ணே!" என்று பாகுமொழி பேசலானான். "சீ! விடு கையை!" என்று சொல்லிக்கொண்டே இடையிலிருந்த கத்தியைக் கையிலேந்தினாள். இமை கொட்டும் நேரத்தில் இருங்கோவே ளின் மார்புக்கு நேராகக் கத்தியுடன் பாய்ந்தாள். ஆனால் போர்மறவன் இருங்கோவேள், அலட்சியமாகச் சிரித்துக் கொண்டே அவளைத் தந்திரமாகத் தடுத்துக் கீழே வீழ்த்தினான். மீண்டும் கத்தியைத் தூக்கினாள். முன்னிலும் பன்மடங்கு ஆவேசமாக அவன்மீது பாய்வதற்கு ஓடினாள். இந்த முறையும் தோல்வி! இப்படிப் பல தடவை; அவளால் அவனைக் கொல்லவே முடியவில்லை.