பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418

கலைஞர் மு. கருணாநிதி


கரிகாலன் வீரன் ஒருவனை அழைத்து, "அந்த மண்டபத்தின் பக்கம் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு ஒரு சிறு தீவட்டியையும் நட்டு வைத்து விட்டு வா", என்று கட்டளையிட்டான். . அவன் போய் மண்டபத்தைச் சுற்றிலும், உள்ளேயும் தன் கூரிய கண்களால் புலனாய்வு புரிந்துவிட்டு "யாருமே இல்லை" என்று கூறினான். பின்னர் கரிகாலன் அந்த மண்டபத்தை நோக்கி அடிகளை எடுத்து வைத்தான். காரிக்கண்ணனாரும், மூன்றாவது யவனக்கிழவரும் அவனைப் பின்தொடர்ந்து சென்றனர். புகார் நகரத்தில் எங்கோ ஒரு தெருக்கோடியில் படுத்துக்கொண்டு இருங்கோவேளின் சாவுக்கு இரங்கல் தெரிவிப்பதைப் போல நாய் ஒன்று ஊளையிட்டு அழுதது. பொழுது விடிவதற்கு நெடுநேரம் இருப்பது புரியாமலே அவசரக்காரச் சேவல் ஒன்று நீட்டி முழக்கிக் கூவியது. மண்டபத்தை அடுத்த மரங்களின் இலைகள், காற்றின் வலிமையான தழுவலைத் தாங்க முடியாமல் சரசரவென்று முனகித்திணறின. மற்றபடி, எந்தவகையான ஓசைகளின் ஆர்ப்பரிப்பும், இல்லாமல் எங்குமே ஒரே அமைதி! அமைதி! மண்டபத்தில் அமர்ந்து, கீழே வாசலில் எரிந்து கொண்டிருந்த தீவட்டியின் ஒளிக்கற்றையின் மீதே சிறிது நேரம் தன் விழிகளைப் பதித்திருந்த கரிகாலன் தொண்டையைக் கனைத்து அமைதியைக் கலைத்தான். "என்ன புலவர் அவர்களே? தங்களை எதற்காக இங்கே தனியே பேசுவதற்கென்று அழைத்து வந்திருக்கிறேன் தெரியுமா?" என்று வினவினான். "ஓ! நன்றாகத் தெரியுமே! இந்த யவனக் கிழவரைப் பற்றிப் பின்னால் விளக்குவதாகச் சொன்னேன்; இவரைப் பற்றி அறிந்து கொள்ளத்தான் இங்கே அழைத்து வந்திருக்கிறீர்கள்.”