பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/409

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

425


ரோமாபுரிப் பாண்டியன் 425 காளைகள் தத்தம் கட்டுமரங்களைத் தள்ளியவாறே கடலினுள் பாய்ந்தனர். குழுமி நின்ற பொதுமக்கள் கையொலி எழுப்பி ஆர்ப்பரித்து, முத்துக்குளிக்கச் செல்வோருக்கு உற்சாகம் ஊட்டினர். சங்கினை ஊதி விழாவினைத் தொடங்கி வைத்திட்ட இளம்பெரு வழுதியோ மக்களின் களியாட்ட ஆரவாரங்களில் கருத்தினைச் செலுத் திடவில்லை. சிறிது நாழிகைக்கு முன், தான் கண்ட சேயிழையின் பேரழகு தந்த பெருமயக்கத்திலேயே தன் எண்ணங்கள் யாவும் பின்னிட நின்றிட்டான். தன் கரத்திலிருக்கும் வாழை மடலின் வழுவழுப்போடு கூடிய வலம்புரிச் சங்கினைக் காணக்காண அந்த அணங்கு நல்லாளின் அழகுக் கழுத்தே நினைவினில் வந்து அலைகளை எழுப்பியது. ஆனால் அந்தச் சங்கின் அகண்ட வாயை நோக்கிய அவன், 'அவளுடைய வாயும் இப்படித்தான் நீளமாக இருக்குமோ?' என்று எண்ணிய உடனே தனக்குள் தானே சிரிக்காமல் இருக்க அவனால் முடியவில்லை. அருகில் நின்ற மெய்க்காவலனை நோக்கி, "ஆமாம்! இன்னும் நீ புறப்படவில்லையா?" என்று மெல்லக் கேட்டான். முதலில் ஒன்றும் விளங்கிடாமல் விழித்த அவன் பின்னர் புரிந்து கொண்டவனாக, "ஓ! அதற்கா? ஆனால் தங்களை அரண்மனைவரை திரும்பக் கொண்டு போய்ச் சேர்க்காமல் கிளம்பினால் அறவாணர் என்னைச் சும்மா விடமாட்டாரே?" அவன் தலையினைச் சொரிந்து நின்றான். "அவரிடம் நான் சொல்லிக் கொள்கிறேன்; நீ உடனே புறப்படு. "அப்படியானால் சரி..." என்று குறும்பாக நகைத்தவாறே தன் குதிரையைத் தட்டிவிட்டான் மெய்க்காவலன். அந்த ஆரணங்கு தன் கண்ணில் படமாட்டாளா என்று ஒருமுறை விழிகளை எங்கணும் சுழல விட்டுவிட்டு இளம்பெருவழுதியும் தன் தேரினில் ஏறிக்கொண்டு அரண்மனைக்குத் திரும்ப முற்பட்டான். இன்று அங்காடிகளில் வகை வகையான அணிமணிகளெல்லாம் ஏராளமாகக் குவிந்து ஒரே திருவிழாக் கோலமாக இருக்குமே! அவற்றையும் பார்த்துக் கொண்டே சென்றால் என்ன?' என்று ஆசையெழுந்து விட்டது அவனுக்கு. உடனே அந்தப்பக்கமாகத் தன் தேரினைத் திருப்பினான் அவன். ஓர் அங்காடியில், 'முத்துக் கடுக்கண்', 'முத்துக்கண்டி' 'முத்துச் சல்லி' முதலான அணிகள் பல தொங்கியது, விழிகளைப் பறித்தன.