பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

கலைஞர் மு. கருணாநிதி


செழியனா என்று பாருங்கள்!" எனக் கூறிப் பிணத்தின்மீது மூடப்பட் டிருந்த துணியை விலக்கினான் கரிகாலன். துணி மறைவில் பிணம் கிடந்தது உண்மைதான். ஆனால் அது மனிதனின் உயிரற்ற உடல் அல்ல. ஒரு கோவேறு கழுதையின் அழுகிப்போன சடலம்!

திடுக்கிட்டனர் இரு வேந்தர்களும்! ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். கரிகாலனுக்கு யாரை என்ன சொல்வதென்றே புரியவில்லை.

“இந்த அவமானம் எப்படி நடந்தது? அனுமதித்தவர்கள் யார் யார்?" என்று கர்ச்சித்தான்.

எல்லா வீரர்களும் நடுங்கியவாறு நின்றனர். கிரேக்கக் காவலனை அருகே அழைத்தான் சோழ மன்னன்.

“நீ அந்த வீரனின் பிணத்தைப் பார்த்தாயல்லவா?"

"பார்த்தேன் அரசே!"

"இந்தப் பாழ்மண்டபத்தில் அந்தச் சவத்தைப் பாதுகாப்பாக வைத்ததும் நீதானே?"

"நானும் மற்ற வீரர்களும்தான் அரசே!"

"பிறகு எப்படிப் போர்வீரனுக்குப் பதிலாகக் கோவேறு கழுதை வந்தது?"

"அதுதான் மன்னா மர்மமாக இருக்கிறது!"

"கோழைகள்! குருடர்கள்! நம் கோட்டைக்குள்ளேயே எதிரி விளையாடியிருக்கிறான்- அதை அனுமதித்து ஏமாந்திருக்கிறீர்கள்; ஏமாளிகள்!"

கரிகாலனின் கோபம் எல்லை மீறியது. பாண்டியனைப் பார்த்து "நண்பரே! என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்" என்று மெல்லிய தொனியில் கேட்டுக்கொண்டான்! அப்போது அவன் கண்களில் கனல் பறந்து கொண்டிருந்தது.

"இறந்தவன் செழியன் அல்லன் என்ற இன்பச் செய்தி எனக்குக் கிடைத்தாலே போதும்!" என்று கண்கலங்கியவாறு கூறினான் பெருவழுதிப் பாண்டியன்.

"யார் அந்தச் செழியன்? அவருக்காக மிகவும் கவலைப்படுகிறீர்களே!" என்று விசாரித்தான் சோழன்.