பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

427


ரோமாபுரிப் பாண்டியன் 427 சிறிது தூரத்தில், கிழவியொருத்தி, 'முத்துக் கொம்பன்' என்னும் மீன்களையும் வேறு பல கயல்களையும் விரிவாகப் பரப்பி விலைகளைக் கூவினாள். பிறிதோர் அங்காடியில், ஓரங்களில் முத்துமணிகள் மினுமினுக்கும், மேலே போட்டுக் கொள்ளக்கூடிய முத்துத் தரயங்களும், முத்து வண்ணச் சேலைகளும் பளபளவென்று பார்வையை ஈர்த்தன. சற்றுத் தொலைவில் நிழற்பந்தர் விரித்து நின்றது ஒரு பசுமையான வன்னிமரம். அதன் கிளையிலமர்ந்திருந்த குரங்கு ஒன்று தன் குட்டியை மடியிலே போட்டுக் கொண்டு முத்துக்கள் உள்ளே செலுத்தப்பட்ட கிளிஞ்சல்களை ஆட்டி வேடிக்கை காட்டியது. அந்த அழகிய கிலுகிலுப் பையைக் கொண்டு குழந்தையின் அழுகையை நிறுத்த முயன்ற குரங்கின் 'கூர்மையைக்' கண்டு வியந்து களிப்புற்றான் இளம்பெருவழுதி. ஆனால்.... அடுத்த கணமே, களிப்புத் தவழ்ந்த அவனது பரந்த முகத்திலே கனல் தெறிக்கலாயிற்று. ஏனெனில், வன்னிமரத்திற்கு எதிர்த்தாற்போல் இருந்த அங்காடியின் முகப்பிலே தொங்கிய பெயர்ப் பலகையில் தமிழ் இல்லை; ஆம். தமிழ் எழுத்துக்கள் இல்லை! அதனைக் கண்டதுமே அவனுடைய குருதி கொதித்தது! தன்மான உணர்வு கொழுந்து விட்டு எரிந்தது! எனினும் தன் ஆத்திரத்தையெல்லாம் பொறுப்புணர்வோடு அடக்கியவனாக, எதிரே வந்து கொண்டிருந்த காவல் மறவனைக் கையசைத்து அழைத்தான். அவனிடம், "உடனே அந்தப் பெயர்ப் பலகையை அகற்றிடவேண்டும் என்று அந்த அங்காடிக்காரனிடம் சொல்!' என்று ஆணை பிறப்பித்து விட்டுத் தன் தேரினை மிகக் கடிதாக அரண்மனையை நோக்கிச் செலுத்தினான். காலையில் கடற்கரையோரமாகத் தான் கண்ட காரிகையைப் பற்றிய கற்பனைகளெல்லாம் இப்பொழுது இளம்பெருவழுதியிடம் அறவே இல்லை. அவனுக்கு உறங்கவும் தோன்றவில்லை; உட்காரவும் முடியவில்லை. இருப்புக் கொள்ளாமல் அவன் அங்குமிங்கும் உலவிய வண்ணமே இருந்தான். அவனுடைய நினைவுகள் அனைத்தும் 'மாகதி மொழி'யில் வரையப்பட்டிருந்த பெயர்ப் பலகையையும், அதனைத் துணிச்சலோடு மாட்டி வைத்திருந்த அங்காடிக்காரனையுமே சுற்றிச் சுற்றிச் சுழன்றன. ஆய்வுரையாளராகிய அறவாணர் வயதிலே முதிர்ந்தவர். நண்பகல் உணவு அருந்தியதும், சில நொடிகளாவது உடலைக் கீழே கிடத்தி அறிது யிலில் ஆழ்ந்திருப்பது அவர் வழக்கம். அது இளம்பெருவழுதிக்கும் தெரியும்.