பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/420

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

437


ரோமாபுரிப் பாண்டியன் 437 பூரிப்பான அங்கப் பகுதிகளில் மழைத்துளிகள் விழுந்து தெறித்துப் புதுமெருகினைச் சேர்த்தன. அவளுடைய காலடிகளையோ கடலலைகள் முத்தமிட்டன; மோதித் திரும்பின. தன் புரவியிலிருந்து இளம்பெருவழுதி கீழே குதித்து அவள் அருகினில் விரைந்தான். தான் காலையில் கண்டு மயங்கிய அன்னப்பேடுதான் அந்த ஆரணங்கு என்று உறுதியாக்கப்பட்டது அவனுக்கு. முகத்தில் நீரைத் தெளித்தாலே மயக்கந் தெளிவது இயற்கை; மழையே பொழிந்தும் கூட அவள் நினைவிழந்து, நிலைகுலைந்து கிடந்தது அவனுக்குப் புதிராகவே இருந்தது. முதலில் அவளைக் கண்விழிக்கச் செய்திட வேண்டுமே என்னும் கவலையோடு அவளது பூவுடலை அள்ளியெடுத்து அவளைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்த புரவியின் முதுகில் குறுக்காகப் போட்டான். மேற்கே சிறிது தூரத்தில் 'மினுக் மினுக்' என்று ஏதோ வெளிச்சம் தெரிந்தது. அதனை நோக்கி இரண்டு குதிரைகளையும் கால்நடை யாகவே இட்டுச் சென்றிட்டான் அவன். அருகில் நெருங்க நெருங்க அது ஒரு பாழ்மண்டபமே என்று தெரிந்தது. கற்றாழை நார்போலத் தலைவெளுத்திட்ட மூதாட்டி ஒருத்தி அங்கே கற்களையே அடுப்பாக்கிச் சோறு பொங்கிக் கொண்டிருந்தாள், சுருக்கங்கள் விழுந்து முதுமைச் சுவடுகள் படர்ந்திட்ட அவளது மேனி, காய்ந்து போன பீர்க்கங்காயையே நினைவுபடுத்தியது. குதிரையிலிருந்து அந்த இளம் பெண்ணை இறக்கிக் கொணர்ந்து மண்டபத்தின் உள்ளே படுக்க வைத்திட்டான் இளம்பெருவழுதி. "அந்தப் பெண்ணுக்கு என்ன மயக்கமா?" என்று அக்கறையுடன் கேட்டாள் கிழவி. "ஆமாம் பாட்டி! உன்னிடம் மஞ்சள் துண்டு ஏதாவது இருக்கிறதா?" "இருக்கு. இதோ கொண்டு வருகிறேன்' என்று கூறிய அவள், தன்னுடைய துணி முடிச்சிலிருந்து, ஒரு மஞ்சள் துண்டினைத் தேடி எடுத்தாள். அடுப்பு நெருப்பிலே காட்டிச் சிறிது பற்றத்தொடங்கியதும், அதனை அப்படியே அந்த அணங்கின் மூக்கின் அருகே காட்டினாள். சுருள்சுருளாகக் கிளம்பிய மஞ்சள் புகை, மடந்தையின் மண்டையில் நன்றாக நெடியேற்றி அவளை விழித்திடச் செய்து விட்டது. சில விநாடிகள் அவளுக்கு எதுவுமே விளங்காத புதிர் நிலை; எப்படித்தான் விளங்கிட முடியும்? மிரள மிரள விழித்துப் பார்த்த அவள்