பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/421

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438

கலைஞர் மு. கருணாநிதி


438 கலைஞர் மு. கருணாநிதி பிறகு தன்னினைவு வரப்பெற்றவளாகத் தானே தலையினைக் கிளப்பிச் சுவரினை ஒட்டிச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். "நல்லவேளை,தம்பி! நான்கூட இந்தப் பெண் பிழைப்பாளோ. மாட்டாளோ என்று பயந்தே போய்விட்டேன்" என்று ஆறுதலாகப் பெருமூச்செறிந்த மூதாட்டி மீண்டும் தன் அடுப்பினைக் கவனிக்கச் சென்றிட்டாள். "இங்கே எப்படி வந்தோம் என்று திகைப்பாக இருக்கிறதா?" என்று முறுவலுடன் கேட்டான் இளம்பெருவழுதி, அந்த ஏந்திழையைப் பார்த்து. 'ஆம்' என்று அவள் இதழ்களைத் திறந்துவிடவில்லை - தலை யையே அசைத்தாள். மழையில் நனைந்து கொண்டு கடலை ஒட்டிக் கிடந்த உன்னை நான் மட்டும் கண்டிராவிட்டால் இந்நேரம் அந்த அலைகளே உன்னை விழுங்கி ஏப்பம் விட்டிருக்குமே! மதியத்திலிருந்து பட்டினிதானே?" பரிவுடன் கேட்டான் அவன். அதற்கும்,"ஆம்" என்பதற்கு அடையாளமாகத் தலையையே அசைத்தாள் அவள். 'அந்தப் பசி மயக்கத்தோடு, தலையில் பட்ட காயத்திலிருந்து குருதியும் நிறைய வெளியாகியிருக்கும் என்று நினைக்கிறேன். அதனால்தான் குதிரையில் வந்து கொண்டிருந்த நீ நினைவினை இழந்து கீழே விழுந்திருக்கிறாய் - இவ்வாறு அவன் கணிப்பினை வெளிப் படுத்தியதும், அவள் தொண்டையைக் கனைத்துக்கொண்டு மெலிந்த குரலில், "எனக்குக் காயம்பட்டது உங்களுக்கு எப்படித் தெரியும்" என்று அவனை நோக்கினாள். 'என்னுடைய மெய்க்காவலன்தான் முதலில் வந்து சொன்னான். தமிழின் மானத்தைக் காப்பதற்காக நீ புரிந்த வீரச் செயலைக் கேட்டதும் நான் எவ்வளவு பூரிப்படைந்தேன் தெரியுமா? எங்கே அந்தத் தமிழ்ப்பகைவர்கள் பழிக்குப் பழி வாங்கத் திட்டமிட்டு உன் உயிரையே பறித்திடுவார்களோ என்று அஞ்சி, உன்னைத் தேடிக் காப்பாற்றுவதற்காக நான்கு திக்குகளுக்கும் ஆட்களை அனுப்பி விட்டு, நானும் புறப்பட்டு வந்தேன். நீயோ இப்படிக் கடல் விழுங்குவதற்கு ஏதுவாகக் கண்ணை மூடிக்கிடக்கிறாய்.... ஆமாம், நான் யார் என்று உனக்குத் தெரிகிறதா?" "கொற்கைப்பட்டினத்தை ஆண்டு கொண்டிருக்கும் பாண்டிய இளவரசர் தானே தாங்கள்?" உனக்கு எப்படி நான் இளவரசன் என்று தெரியும்?'