444
கலைஞர் மு. கருணாநிதி
444 கலைஞர் மு.கருணாநிதி அத்துடன் தமிழின் மானத்தைக் காத்திடுவதில் தாங்கள் எத்துணை ஆர்வத்தோடு ஈடுபட்டுச் செயலாற்றினீர்கள் என்கிற செய்தியும் தெரிந்தால் தங்கள் மீது இயற்கையாகவே ஒரு தணியாத பாசம்.. தளராத இதயப் பிடிப்பு-பிணைப்பு எல்லாமே உண்டாகிவிடும். தங்களைச் சந்தித்திட அவரே முந்திக் கொள்ள முனைவார். ஆனால்..." “என்ன ஆனால்..." "நாங்கள் தங்கியுள்ள மரமாளிகையைக் கண்டு பிடித்து வந்து சேர்வதுதான் தங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். எங்களுடைய வீரர்கள் எளிதில் யாரையும் உள்ளே விட்டுவிடமாட்டார்கள். ஒன்று செய்யலாம்; என் அண்ணனின் பெயர் பொறித்த அரச முத்திரைப் பதக்கமொன்று என்னிடம் இருக்கிறது. அதனைத் தங்களிடம் தருகிறேன். எங்கள் ஆட்களிடம் அதனைக் காட்டினீர்களானால் தங்களை எதுவுமே கேட்டிட மாட்டார்கள். பிறகு, தாராளமாக எங்கள் மாளிகைப் பக்கம் வரலாம்" என்றவாறே தன் இடையினில் செருகி வைத்திருந்த அந்த முத்திரைப் பதக்கத்தினை எடுத்து நீட்டினாள் தாமரை. அதனை மகிழ்ச்சிப் பெருக்கோடு பெற்றுக்கொண்ட இளம்பெரு வழுதி, “மெத்த நன்றி, தாமரை! உன் அறிவுக் கூர்மையைக் கண்டு நான் பெரிதும் வியக்கிறேன். உன்னை எவ்வாறு பாராட்டுவது என்றே எனக்குப் புலனாகவில்லை; விரைவில் உன்னை வந்து சந்திக்க முயல் வேன். ஆனால் என்னைப் பற்றிய தகவல்களை உன் அண்ணனிடம் இப்போதே அவசரப்பட்டுச் சொல்லிட வேண்டாம்" என்று உளந்திறந்து மொழிந்தான் இளம்பெருவழுதி. இதற்குள் சோற்றினைப் பொங்கி முடித்துவிட்டாள் மூதாட்டி. "நேற்று வைத்த முடக்கத்தான் சாறுதான். ஆனாலும் உடம்புக்கு நல்லது' என்று தயங்கித் தயங்கி அவள் கூறினாலும் அவர்கள் இருவருக்கும் உணவு படைப்பதில் விரைந்தே ஈடுபட்டாள். அப்போதிருந்த ஆற்றொணாப் பசிக்கு, அந்தச் சோறும் சாறும் அருமையான விருந்தாகவே இனித்தன தாமரைக்கு! இருங்கோவேள்' எழுத்துக்கள் பொறிக்கப் பெற்ற முத்திரைப் பதக்கத்தினைத் தாமரையிடமிருந்து பெறுவது தான் எளிதாக இருந்ததேயன்றி, அவள் தங்கியிருந்த மரமாளிகையைக் கண்டுபிடிப்பது அத்துணை எளிதாக இல்லை பெருவழுதிக்கு. அவனுடைய தலையாய நோக்கம், இருங்கோவேளையும் கரிகால ரையும் இணைத்து வைத்திடல் மட்டுந்தானா? அல்ல; தாமரையை எவ்வாறேனும் தன் வாழ்க்கைத் துணையாக எய்திட வேண்டும் என்பதுமாகும்!