454
கலைஞர் மு. கருணாநிதி
454 ட கலைஞர் மு. கருணாநிதி அவன், தானே வழிதவறிச் சென்றிட மாட்டான் என்னும் திடமான நம்பிக்கையும் அவர்களுக்கு இல்லாமல் இல்லை. எனினும் இளமைத் துடிப்புப் பொல்லாததாயிற்றே! கரிகாலன் தொண்டையைக் கனைத்துக் கொண்டவனாக, "என்ன புலவர் அவர்களே! ஒரு வேளை...?" என்று இழுத்தாற்போல் தொடங்கினான். "இருக்கவே இருக்காது அரசே! உறுதியாக நம்பலாம்” என்று தெளிந்த குரலில் மொழிந்தார் காரிக்கண்ணனார். அவர்களுடைய சொற்களில் புதைந்துள்ள மறைபொருளை உணர்ந்து கொண்டவனைப் போல் செழியன் குறுக்கிட்டான். "அப்படியானால் தாமரையின் அறைப்பக்கம் காணப்பட்ட அந்த ஆள் நாலாவது யவனக்கிழவராக இருப்பாரோ? வேறு எப்படித்தான் அவள் வெளியேறினாள் என்பது புரியாத புதிராக இருக்கிறதே!” "சரி! அந்தப் புதிரை அவிழ்ப்பது பற்றி அப்புறம் சிந்திக்கலாம். இப்போது இருங்கோவேளின் இறுதிக் கடனுக்குரிய ஏற்பாடுகளைப் பற்றிக் கவனிப்போம்!" என்று முத்தாய்ப்பு வைத்துவிட்டு மேலே நடந்தான் கரிகாலன். பொழுது புலர்ந்தது. இருங்கோவேளின் இறப்புச் செய்தி புகார் நகரம் முழுவதுமே எதிரொலிக்கலாயிற்று. அதற்குக் காரணம், வானக் கவிகையே கிழிந்திடும் வண்ணம் அதிர்ந்திட்ட பறை முழக்கமே! மணவேளையின் போது ஒரு வகையாகவும், பிண வேளையின் போது வேறு வகையாகவும், பறையினை முழக்குவதற்கே வரையறை வகுத்து வாழ்ந்தவர்கள் அல்லவா தமிழ்ப் பெருங்குடியினர்! அந்தக் கலையிலே கைதேர்ந்தவர்கள் இப்போது இருங்கோவேள் மறைவுச் செய்தியை ஒலிபரப்புவதிலே தங்கள் திறமை அனைத்தையும் காட்டிப் பறைகளை முழக்கினர். டையிடையே வினாக்குறியினை ஒத்த கொம்புகள் யானைகள் பிளிறினாற் போல் ஓலமிட்டு அழுதன. இறுதி வேளை நெருங்கிவிட்டது. இன்னும் சில வினாடிகளில், தன் தமக்கையின் கணவனான இருங்கோவேளின் சடலம் மண்ணோடு மண்ணாகப் போகிறதே என எண்ணிய அளவில் செழியனால் துயரத்தினை அடக்கிட இயலவில்லை. என்ன இருப்பினும் இரத்த பாசம் அல்லவா? ஒரு மரத்தின் மறைவிலே நின்று கொண்டு அவன் குமுறிக் குமுறி அழுதிட்டான்.