பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

455


ரோமாபுரிப் பாண்டியன் 455 அதே நேரத்தில் முத்துநகையோ, தீப்பட்ட தேனீயாகத் துடியாய்த் துடித்தாள். இருங்கோவேளை வேண்டுமானால் அவள் வெறுத்திடலாம்; அவனுடைய உயிரையே பறித்திடலாம். ஆனால் வீரபாண்டியை அவனுடைய வீறுநடையினை - விரிந்த மார்பினை - ஆரத்தழுவலை. அன்புக் கொஞ்சலை அவளால் எங்ஙனம் மறந்திட இயலும்? அதுவும் தன்கையினாலேயே அவனைக் கொன்றிட நேர்ந்ததே என்று நினைத்திட்ட அளவில், அவளுடைய இதயமே வெடித்துப் பிளந்திடும்போல் இருந்தது. இவ்வாறாக இரண்டு இரங்கத்தக்க உயிர்கள் தனித்துப் புலம்பித் தத்தளித்திட, இருங்கோவேளுக்குரிய இறுதிக் கடன்கள் எல்லாவிதமான அரச மரியாதைகளுடனும் இனிது நிறைவேறின. கரிகாலன் தன்னுடைய மாளிகைக் கூடத்தினில் ஓய்வாக அமர்ந்திருந் தான். புலவர் காரிக்கண்ணனாரும் உடனிருந்தார். தம்முடைய செல்ல மகள் முத்துநகையின் எதிர்காலம் இனி என்ன ஆகுமோ என்னும் கவலையின் நிழல் அவரது பழுத்த முகமெங்கும் படர்ந்து கிடந்தது. சிறிது நேரத்தில் மெய்க்காவலன், கரங்கள் கட்டப்பெற்ற ஒரு காவலாளியை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான். "மன்னவா! தாமரை தப்பிச் செல்லுவதற்கு இவனும் துணை புரிந்திருப்பானோ என்று ஐயுறும்படியாக இருக்கிறது. ஏனெனில் அவள் அணிந்திருந்த முத்துமாலையை இவன் 'கையூட்டாக' (இலஞ்சமாக)ப் பெற்று ஒளித்து வைத்திருக்கிறான். அதற்கு இவன் கூறும் காரணங்கள் நம்பும்படியாக இல்லை" என்றான். "நீ என்ன சொல்கிறாய்? கையூட்டு வாங்கிக் கொண்டு இவன் தாமரையைத் தப்பவைத்து விட்டானா...?" "ஆம் அரசே! அப்படித்தான் நாம் எண்ணும்படியாக இருக்கின்றன இவனது சொல்லும் செயலும்..." "வேடிக்கையாக இருக்கிறது மெய்க்காவல! வேடிக்கையாக இருக்கிறது! உழைத்திடாமல் எவரிடமிருந்தும் ஒரே ஒரு சல்லிக் காசினைப் பெறுதல் கூடத் தகாத 'இரத்தல்' எனக்கருதுகின்ற இந்தத் தமிழ் மண்ணிலே 'கையூட்டு' என்கிற கொடிய பழக்கம் குடியேறிட இடம் தருவதாவது? அதனை முளையிலேயே கிள்ளி எறிந்திட வேண்டுமே!. இல்லையென்றால் இவனைப் போன்ற ஒரு சில புல்லுருவிகளின் பொல்லாங்கான போக்கினால், அரசுப் பணியாற்றும் அத்தனை பேருக்குமே அவப்பெயர் உண்டாகிவிடுமே!... சரி, உடனே இவனைச் சிறையிலே தள்ளி, மேற்கொண்டு துப்புகளைத் துலக்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து முடிக்கி விட்டிட வேண்டும்!" என்று ஆணை பிறப்பித்தான் கரிகாலன்.