பெருவழுதியின் உள்ளத்தைப் புயலாக்கிவிட்டுச் செழியன் நிம்மதியாகப் புலவர் காரிக்கண்ணனார் வீட்டில் சாய்ந்திருந்தான். முத்துநகையின் அன்பு கமழும் உபசாரங்கள் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தன. அவள் தயாரித்துக்கொடுத்த மிளகுநீர் மிகவும் உற்சாகத்தை அளித்ததாகப் பெருமை பாராட்டிப் பேசினான். அவளுடைய குடும்ப வரலாறுகளைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள செழியனுக்குப் பேராவல் எழுந்தது.
"உன் தாயார் பெயர் என்ன?" என்று கேட்டான்.
"தாமரைக்கண்ணியார்! ஆனால் என் தாயின் முகத்தை நான் பார்த்ததே இல்லை! தாயைக் கொன்றுவிட்டுப் பிறந்த சேய் நான்!" என அழுதுகொண்டே பதிலிறுத்தாள் முத்துநகை.
மெல்ல முத்துநகை செழியனின் தாய் தந்தை பற்றி வினவினாள்.
செழியன் அதற்கு, "இருக்கிறார்கள்!" என்றான்.
"எங்கேயிருக்கிறார்கள்!"
"என் இருதயத்தில்"
"தாயின் பெயர்?"
"தமிழ்"
"தந்தை?"
"பாண்டிய நாடு!"
"என்ன சொல்லுகிறீர்கள்?"
"ஆமாம் முத்துநகை!" பாண்டியநாட்டுத் தந்தையும் தமிழ்த்தாயும் பெற்றெடுத்த மகன்தான் நான்!"
"நான் சொன்னது போலச் சரியாகச் சொல்லுங்கள்!"
"சரியாகச் சொல்ல என்னால் இயலாது! எப்படியோ எனக்கு ஒரு தாயும் தந்தையும் இருந்திருக்கவேண்டும், அது நிச்சயம்!"