464
கலைஞர் மு. கருணாநிதி
நெடுமாறன் தன் மறவர்களுடன் முதல்நாள் மாலையே புரவிகள் மீதேறி மதுரை மாநகருக்குப் புறப்பட்டு விட்டான். மறுநாள், நிலந்தெளிந் திடும் நேரத்தில், ஒரு சிறு தேரினில் புலவர் காரிக்கண்ணனார், முத்துநகை, செழியன் ஆகிய மூவரும் கிளம்பினர். இந்த நெடும்பயணம் முத்துநகையின் துயர்மேகம் சூழ்ந்த உள்ளத்திற்கு அயர்வினை நீக்கிடும் அருமருந்தாகவே அமைந்து விட்டது. வழி நெடுகிலும், எழிலைப் பொழிந்திடும் இயற்கைக் காட்சி கள், அவளது இதயத்திற்குக் குளிர்ச்சியைக் கொடுத்தன. மகிழ்ச்சியை அளித்தன! பாண்டிய நாடு கடல்வளம் மட்டுமன்றி மலை வளமும் பூண்டதல்லவா? விண்ணிலே மிதந்தோடும் கருமுகில்களைப் போல் வும், மலைக்குன்றுகள் ஆங்காங்கே படுத்துக் கிடந்த வண்ணம், எத்தகைய இடர்வரினும், மலைவுறா மனங்கொண்ட மனிதர்களை நினைவுபடுத்தின. குன்றுகளை அடுத்த பள்ளத்தாக்குகளில் பச்சைப் பசேல் என்னும் செந்நெற் பயிர்கள். இடையிடையே அதில் சந்தன மரங்கள் நெடிதோங்கி நிழல் பரப்பின. நெல் வயல்கள் மட்டுமின்றி. இஞ்சி, மஞ்சள் செடிகளும் விழிகளுக்கு விருந்தளித்தன. அது முசுண்டைக் கொடிகள் பூத்திடும் காலம் போலும். அவற்றிலே வெள்ளித் திருகாணிபோல் பூக்கள் மலர்ந்து பாறைகளிலெல்லாம் பால் விரித்தாற் போன்று சிதறிக் கிடந்தன. அவற்றின் நடுநடுவே ஓடிய பீர்க்கங் கொடிகளிலோ தங்கப் பில்லாக்காகத் தகதகக்கும் மஞ்சள் மலர்கள். செங்கொன்றைப் பூக்களும் பவளமணிகளை நினைவூட்டிப் பூத்துக் குலுங்கின. மதுரை மாநகரை நெருங்க நெருங்க, முத்துநகையின் மூட்டம் போட்டிருந்த மனநிலை-வாயைத் திறந்திடாத அமைதிப் போக்கு அவளைவிட்டு முற்றிலும் விடைபெற்று விட்டது. ஏதோ புதிய உலகி னில் அடிவைத்தாற் போல அவளது இதயமே இதழ்கள் அவிழ்ந்திட்ட மலராக மாறிவிட்டது. ஒவ்வொரு பகுதியினைத் தங்களுடைய சிறுதேர் கடந்திடும் பொழுதும், 'அது என்ன குன்று அண்ணா? - இது என்ன சுனை