பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரோமாபுரிப் பாண்டியன்

45


"அவர்கள் யார்? அவர்கள் பெயர்?"

"தயவு செய்து கேட்காதே- என்னால் சொல்ல இயலாது! அதனால் எனக்குத் தாய் தந்தையே கிடையாது என்று கருதிவிடாதே! தாமரையிலும், அல்லியிலும் திடீரென குழந்தைகள் தோன்றுவதாகக் கதை கட்டுகிறார்களே; அப்படிப்பட்ட தெய்வப் பிறவியல்ல நான்! தாய் வயிற்றில் உதித்த மனிதப் பிறவிதான்!"

அவனுடைய பேச்சு நயங்கண்டு முத்துநகை மகிழ்ச்சி கொண்டாள்; தாயைப் பற்றிய நினைவு அவளுக்குத் துயரத்தை உண்டு பண்ணியிருந்த போதிலும் அவனது பதில்களில் உள்ள சுவை கண்டு சோகத்தையும் ஒருவாறு மறந்தாள்.

இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது தெருப்புறத்திலேயிருந்து "அன்பே சிவம்! அன்பே சிவம்! பண்பே சைவம்!" என்ற முழக்கம் கேட்டது.

சிவனடியார்கள் வந்திருப்பதாகச் செழியனிடம் தெரிவித்துவிட்டு, முத்துநகை தெருப்பக்கத்துக் கதவைத் திறந்தாள். பதினைந்துக்கு மேற்பட்ட அடியார் கூட்டத்தினர், அவள் கதவைத் திறப்பதற்குள் மளமளவென்று உள்ளே நுழைந்தனர். முத்துநகைக்கு ஒரே புதுமையாக இருந்தது. தெரு வழியே செல்லும் அடியார் கூட்டம் திடீரென வீட்டுக்குள் நுழைந்தது கண்டு திடுக்கிட்டுக் கலங்கினாள்.

அவர்கள் அவளைப் பொருட்படுத்தவில்லை. "அன்பே சிவம்! பண்பே சைவம்!" என்று கூறியவாறு அவர்கள் செழியனின் படுக்கைப் பக்கம் பாய்ந்தனர். பருந்து உணவைப் பற்றுவது போல் அவனைப் பற்றிக்கொண்டனர்.

செழியன் திமிறிப் பார்த்தான். அன்பே சிவமென உச்சரித்த அடியார்கள் கைகளில் வாட்கள் மின்னிக் கிளம்பின. முத்துநகை அதுகண்டு அலறினாள்! அவளை ஒரு சிவனடியார் பிடித்துக் கொண்டார். இன்னொரு அடியார் ஒரு மூலிகையை அவள் முகத்தருகே நீட்டினார். அவள் மயங்கிக் கீழே விழுந்தாள்! பிறகு அவளை யாரும் திரும்பிப் பார்க்கவில்லை! செழியனைத் தூக்கிக் கொண்டு அடியார் கூட்டம் வெளியேறியது. முத்துநகை ஆடாமல் அசையாமல் படுக்க வைத்த சிலைபோல மயங்கிக் கிடந்தாள்.

தெருவிலே "அன்பே சிவம்" என முழங்கிச் செல்லும் அடியார்களின் கூட்டத்தைப் பார்த்தவாறு அவர்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டுத் தன் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார் காரிக்கண்ணனார். அடியார் களின் அன்னக் காவடிக்குள்ளே மயக்கமூட்டப்பட்ட செழியன் மறைத்து