470
கலைஞர் மு. கருணாநிதி
470 கலைஞர் மு. கருணாநிதி "புகார் அரண்மனையிலிருந்து தாமரை காணாமற் போன செய்தி யினை அறிந்ததும், யவனக்கிழவர் வேடத்திலிருந்த இளம்பெருவழுதி அவளைத் தேடிக் கண்டு பிடிப்பதற்காக எங்கேனும் அலைந்திருக்கலாம். அதனால் குறித்த காலத்தில் கொற்கைப் பட்டினத்தை அடைய முடியாது போயிருக்கலாம். இதற்குள் மதுரையிலிருந்து மன்னரைப் பற்றிய செய்தி வந்திருக்க வேண்டும். அந்த நேரத்தில், தான் கொற்கையில் இல்லாமல் போனதற்குப் பொருத்தமான - மற்றவர்கள் நம்பும்படியான ஒரு காரணம் வேண்டாமா? அதற்குத்தான் அந்த 'மாகதி' மொழிக்காரனைத் தனக்கு வாய்ப்பாக அவர் பயன்படுத்தி இருக்கலாம்?” என்று எண்ணிய அளவில்தான் காரிக்கண்ணனாருக்கு நகைப்பு ஏற்பட்டது. இன்னொன்றும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும். கொற்கையிலே புகைந்திட்ட மொழிப்பூசல் பற்றி செழியனிடம் புகன்றிட்ட புலவர் அவர்கள், அதிலே இளம்பெருவழுதியும் தாமரையும் எங்ஙனம் முனைந்து ஈடுபட்டுத் தங்கள் தாய்மொழியிடம் நன்றி மிகுந்த சேய்களாக நடந்து கொண்டனர் என்பதனை நவின்றிட்டாரே அன்றி, இளம்பெரு வழுதி தன் இதயத்தினைத் தாமரையின்பால் பறி கொடுத்தமை பற்றியோ, அதற்காக அவன் யவனக் கிழவர் வேடம் புனைந்தது பற்றியோ எதுவுமே பகர்ந்திடவில்லை. - அந்தச் சிறிய தேர் - முத்துநகை, காரிக்கண்ணனார், செழியன் ஆகிய மூவரையும் சுமந்திட்ட அந்தச் சிங்காரமான தேர் பசுமையான பொழில்கள் புடைசூழ்ந்த வையை ஆற்றினைக் கடந்து மதுரை மாநகரிலுள்ளே நுழைந்திட்ட பொழுது பகலவன் தன் முதுமைப் பருவத்தை நோக்கி வெகு வேகமாக விழுந்த வண்ணம் இருந்தான். முத்துநகைக்கோ, தங்கத் தமிழை வளர்த்திடும் - சங்கந் தழைத்துச் சிறந்திடும் - நான்மாடக்கூடலின் பேரழகினைக் கண்டிட வேண்டும் என்னும் பேராவல்! அவள் தேரினுள் இருந்தவாறே தலையை வெளியே நீட்டி நகரின் எழிலைத் தன் விழிகளால் பருகிட முனைந்தாள். குன்றுகள் படுத்துக்கிடப்பதைப் போன்று நீண்ட மதில்கள். பலகாலம் நெய் தடவப்பட்டதால், களிற்றின் வயிற்றினைப் போல் கறுத்திட்ட நெடிய நிலைக்கதவுகள் - அந்த மதிலின் கதவுகளைத் தாண்டி உள்ளே புகுந்திட்டால் நீரோடும் பேராறுகளைப் போல் நீண்டு கிடக்கும் அகலமான தெருக்கள்- அந்தத் தெருக்களிலே சுறுசுறுப்பாகப் பாய்ந்திடும் மனித வெள்ளம். ஆற்றிலே இலை தழைகளும் பூவிதழ்களும் மிதந்து வருகின்ற மாதிரி அந்த மனித வெள்ளத்தின் இடையிடையே ஊர்ந்து சென்றிடும் யானைத் தேர்கள், குதிரைத் தேர்கள், தெருவின் இருமருங்கிலும்