பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/456

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474

கலைஞர் மு. கருணாநிதி


அவர்கள் மூவரும் அரண்மனையில் நுழைந்திடும் பொழுது நன்றாக இருட்டிவிட்டது. அந்திப் போதில் மட்டுமே மலர்ந்திடும் பிச்சிப் பூக்களைச் சூடிய அணங்குகள், நெய் நிறைந்த 'பாவை விளக்கு'களில் நீண்ட பெரிய திரிகளைத் தோய்த்து எரிய விடுவதில் முனைந்து ஈடுபட்டிருந்தனர். அந்த விளக்குகள் யாவும் அழகான வேலைப்பாடுகள் உடையவை. "இவை என்ன புதுமாதிரியான விளக்குகளாக இருக்கின்றனவே!" என்று வியந்திட்டாள் முத்துநகை, அங்கே திரியினை எரிய விட்டுக் கொண்டிருந்த ஒரு சேயிழையை நோக்கி இதுபற்றிக் கேட்டாள். 'ஆமாம்; இவை யவன நாட்டுப் பக்கத்திலிருந்து வந்தவை. அண்மையில் ரோமாபுரியிலிருந்து தூதுவர் ஒருவர் நம்நாட்டுக்கு வந்திருக்கிறார் அல்லவா? அவர் நம் பாண்டிய வேந்தருக்கு அளித் திட்ட பல பரிசுப்பொருள்களில் இந்தப் பாவை விளக்குகளும் இருந்தன" என்று பதில் வந்தது. அந்த விளக்குகளின் எழிலைப் பருகியவாறே, பாண்டிய மன்னன் படுத்திருக்கும் தனிக் கூடத்திற்குச் சென்றனர் மூவரும். அங்கே, நாற்பது ஆண்டுகள் முதிர்ந்த யானையின் தந்தத்தால் செதுக்கப்பட்ட பூவேலைகள் நெளிந்தோடும் நீண்ட கட்டிலில் அன்னத்தின் அடிவயிற்றுத் தூவிகளாற் செய்திட்ட தலையணைகளின் அரவணைப்பில் அயர்ந்து படுத்திருந்தான் பெருவழுதிப பாண்டியன். "மன்னவா!" என்று காரிக்கண்ணனார் குரல் கொடுத்திடவும் அவனுடைய இமைக்கதவுகள் திறந்து கொண்டன; புலவருக்கு மரியாதை தரும் பொருட்டு எழுந்திருக்கவும் முயன்றிட்டான் அரசன். ஆனால் காரிக்கண்ணனார், "வேண்டாம் அரசே! எதற்கு எழுந்திருக்கிறீர்கள்?" என்று அவனது கரத்தினைப் பற்றித் தடுத்திட்டவாறே கட்டிலை ஒட்டிக்கிடந்த இருக்கை யொன்றில் அமர்ந்து கொண்டார்.