ரோமாபுரிப் பாண்டியன்
475
ரோமாபுரிப் பாண்டியன் 475 மன்னன் தலையினைத் திருப்பிடாமல் பார்ப்பதற்கு வாய்ப்பாகப் புலவரின் பின்னால் வந்து நின்றனர் செழியனும், முத்துநகையும். அவர்கள் மூவரையும் கண்டதும் பெருவழுதியின் முகத்திலே தனியானதொரு மலர்ச்சி ஒளிர்ந்தது. முறுவல் இழையோடிற்று. "தற்போது தங்கள் உடல்நலம் எவ்வாறுள்ளது மன்னவா?" என்று பரிவுடன் கேட்டார் காரிக்கண்ணனார். "தேவலாம்; ஒன்றும் கவலைப்படும்படியாக இல்லை" என்று மென்குரலில் பகர்ந்தான் பாண்டிய மன்னன். "நல்லவேளை ;கரிகாலர் உட்பட நாங்கள் எல்லாருமே பதறியே போய்விட்டோம். சோழ மன்னருக்குத் தங்களை உடனே வந்து பார்த்திட வேண்டும் என்கிற துடிப்புத்தான். ஆனால் எதிர்பாராதவிதமாக ஏற்பட்டுவிட்ட சில சிக்கல்களினால் நகர முடியாத நிலை. எனினும் தங்கள் உடல் நலம் பற்றி ஒவ்வொரு நாளும் மடல் விடுத்திட வேண்டும் என்று கண்டிப்பான அன்புக் கட்டளை இட்டிருக்கிறார் எனக்கு" "அவ்வாறெல்லாம் கவலைப்படும் அளவுக்கு எனக்கு ஒன்றும் ஆகிவிடவில்லை. ஆனால் ஒருநாள் என்னையறியாமல் மயக்கமுற்று விழுந்திருக்கிறேன். அதைக் கண்டு அரண்மனையிலிருந்த அத்தனை பேருமே நடுங்கிப் போயிருக்கிறார்கள். அந்த அச்சத்தின் விளைவாகத் தான் நம்முடைய அமைச்சர்கள் முதலானவர்கள், எச்சரிக்கையாக இருந்திட வேண்டுமே என்கிற போக்கில், பதற்றப்பட்டுக் கரிகாலருக்கும் 'திருமுகம் தீட்டியிருக்கிறார்கள். பரவாயில்லை. அதுவும் ஒருவகையில் நல்லதாகத்தான் முடிந்தது. இல்லையென்றால் உங்களையெல்லாம் இப்படி ஒரே சமயத்தில் சந்தித்து மகிழ்ந்திடும் வாய்ப்புக்கிட்டுமா?" என்று புன்னகை புரிந்திட்ட மன்னன் முத்துநகையை நோக்கி, என்னம்மா? நலந்தானா? பல ஆண்டுகளாக உன்னை மதுரைக்கு அழைத்து வருமாறு பன்னிப் பன்னிக் கூறினேன்; புலவர் கேட்டிட வில்லை. இப்போதாவது அழைத்து வந்தாரே. அதற்காக அவருக்கு நன்றி சொல்லிடத்தான் வேண்டும்!" என்றான். பின்னர் செழியனை நோக்கினான். என்ன செழியா, நலந்தானே? இருங்கோவேள் ஆட்களிடம் சிக்கி எல்லையில்லாத தொல்லைகளுக் கெல்லாம் இலக்காகி விட்டாய் அல்லவா? ஆனால் நீயும் முத்துநகையும் இல்லாதிருந்தால் அந்த இருங்கோவேளை இத்துணை விரைவில் வீழ்த்தி இருக்க முடியாது!" பாண்டிய வேந்தனின் இந்தப் பாராட்டுரையால் செழியன் வாய் திறந்து எதுவுமே பேசிட இயலவில்லை.