476
கலைஞர் மு. கருணாநிதி
476 . கலைஞர் மு. கருணாநிதி ஆனால் காரிக்கண்ணனாரோ, பெருவழுதியோடு சேர்ந்து கொண்டு தாமும் புகழ் மழை பொழிந்தார். "தாங்கள் மொழிவது முற்றிலும் உண்மைதான் அரசே! இருங்கோவேள் வீழ்ந்தது ஒருபுறம் இருக்க கரிகாலன் உயிர் தப்பியதே செழியனின் திறமைமிக்க திட்டங்களினால்தானே! அதற்காகச் சோழநாடே செழியனுக்கு அளப்பரிய கடன்பட்டிருக்கிறது." "போகிறது; சோழநாட்டை மூட்டம் போட்டிருந்த அரசியல் சிக்கல்களெல்லாம் ஒருவாறு அகன்றுவிட்டன. அங்கே வானம் வெளி வாங்கிவிட்டது. ஆனால் இங்கேயோ?..." "ஏன் அரசே அப்படிச் சொல்கிறீர்கள்? இங்கே அவ்வாறெல்லாம் சிக்கல்களுக்கு இடம் இருப்பதாகத் தெரிந்திடவில்லையே?"
ஏன் இல்லை? முதலில் என் மகன் இளம்பெருவழுதியை எடுத்துக் கொள்ளுங்களேன்! என் உடல் நலம் குன்றிவிட்டது என்று கேள்வி யுற்றதும் எங்கோ வெகு தொலைவில் உள்ள பூம்புகாரிலிருந்து கூடத் தாங்கள் எல்லாரும் வந்துவிட்டீர்கள். அவனோ, இதோ பக்கத்திலுள்ள கொற்கையிலிருந்தும்கூட என்னை வந்து இன்னும் பார்த்திட முடியவில்லை. என்ன செய்வது?" "தவிர்க்க முடியாத சூழ்நிலைகளின் காரணமாகத்தான் அவரால் இதுகாறும் வரமுடியாது போயிருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்." "தாங்களும் நம்பலாம், நானும் நம்புகிறேன். புலவர் அவர்களே! ஆனால் பொதுமக்கள் நம்பிட வேண்டுமே! அவர்கள் நம்பிடாத வகையில் பொய்ச் செய்திகளை பரப்பி, அவன் ஒரு பொறுப்பற்றவன் என்கிற தவறான ஒரு கருத்தினை நாடெங்கும் தவழவிட்டு விட்டானே தளபதி நெடுமாறன்! அதற்கு என்ன சொல்கிறீர்கள்!" ஆமாம்; அவர் ஏன் அப்படிச் செய்திட வேண்டும்? அதனால் அவருக்கு என்ன நன்மை?" "இளம்பெருவழுதி பொறுப்பில்லாதவன் என்னும் அவப்பெயரை மக்கள் மனதிலே அழுத்தமாகப் பதித்தால் புதிய பொறுப்புக்களை ஏற்றிடும் நிலை வரும்பொழுது அவைகளுக்கு அவன் தகுதியானவன் அல்லன் என்று மக்களைக் கொண்டே எதிர்ப்புக்குரல் எழுப்பிடலாம். அல்லவா? அதற்காகத்தான்! ஏன், இப்போது ரோமாபுரிக்குப் பாண்டிய நாட்டிலிருந்து ஒரு தூதுவரை நாம் அனுப்பிட வேண்டிய நிலைமையுள்ளதே! அதற்கு, எங்கே நான் இளம்பெருவழுதியைத் தேர்ந்தெடுத்து விடுவேனோ என்கிற அச்சம்; அவன்மீது எனக்கு