ரோமாபுரிப் பாண்டியன்
479
ரோமாபுரிப் பாண்டியன் 479 மன்னன் மேற்கொண்டு வினாக்களைத் தொடுத்திடவில்லை. புன்னகை மட்டுமே புரிந்தவனாக சிந்தனையில் ஆழ்ந்திட்டான். புலவர்காரிக்கண்ணனாருக்கோ அந்தத் துறவியின் போக்குத் துளியும் பிடித்திடவில்லை. அவருடைய திடீர் வருகையும், படபடப்பான சொற்களும் அருவருப்பையே அளித்தன. என்னதான் நமக்குத் தாங்கிட இயலாத இடுக்கண் என்றிட்ட போதிலும் காவலர்களிடமோ அமைச்சர் களிடமோ வேறு தொடர்புடைய கருமத் தலைவர்களிடமோ முதற்கண் முறையிட்டுக் கொள்வதனை விடுத்து, நோய்வாய்ப் பட்டுள்ளாரே என்பதை ஆய்ந்து பார்த்திடாமல், எடுத்த எடுப்பிலேயே இங்ஙனம் மன்னருக்கு இன்னல் தருகிறாரே என்றும் புலவர் எண்ணிடலானார். அவருக்குச் சமணத் துறவியார் மீது எரிச்சல் ஏற்பட்டமைக்கு இன்னொரு காரணமும் உண்டு. ரோமாபுரிக்குத் தாம் அனுப்ப விழைந் திடும் தூதுவர் யார் என்று அரசன் குறிப்பிடப்போகும் வேளையாகப் பார்த்து இப்படிக் குறுக்கே வந்து கெடுத்து விட்டாரே என்பதுதான் அது! அவருடைய கவனத்தைத் திருப்பிடும் வகையில் முத்துநகை அவர் தம் செவியில் மட்டுமே விழுந்திடும் வண்ணம் மெல்லக் கிசுகிசுத்தாள். "இந்தத் துறவி என்னவோ ‘சல்லேகனை' என்றாரே. அப்படி யென்றால் என்ன அப்பா?" "அதுவா? தருப்பைப் புற்களை அடுக்கடுக்காகப் பரப்பி அவற்றின் மீது வடக்குத் திக்கினை நோக்கி அமர்ந்து உண்ணா நோன்பு மேற்கொண்டு உயிர் விடுதலைதான் 'சல்லேகனை' என்பார்கள்." "ஓகோ! வடக்கிருத்தல் என்று புகல்வார்களே அது தானா?” 'அதுவேதான்!' தந்தையும் மகளும் அதற்கு மேல் தங்கள் உரையாடலைத் தொடர்ந்திடவில்லை. பெருவழுதிப் பாண்டியன் தன்னுடைய சிந்தனை அமைதியிலிருந்து விடுபட்டவனாகத் தன் தொண்டையைக் கனைத்திட்டான். "சரி, துறவியாரே! பௌத்தர்களால் தங்களுக்கு என்னதான் இடர் ஏற்பட்டது என்பதனைக் குறிப்பிட்டுக் கூறிட முடியுமா?" "ஒன்றா இரண்டா? எத்தனையோ இடர்கள் அரசே! ஆனால் இன்றைக்கு நிகழ்ந்ததை மட்டும் இப்போது எடுத்துரைக்கிறேன். அரசே, பசுமலையில் எங்கள் கோவிலுக்கு எதிரேயுள்ள திடலில் பௌத்தர்கள் தங்கள் சங்கக் கூட்டத்தைக் கூட்டினார்கள். அதிலே எங்கள் சமண முனிவராகிய கனகநந்தி அவர்களை எவ்வளவு இழிவாக ஏசிட முடியுமோ அவ்வளவு இழிவாக ஏசினார்கள். எங்ஙனம் பொறுத்திட