பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/466

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484

கலைஞர் மு. கருணாநிதி


அன்று 'அறங்கூறு அவை' யத்தினில் வழக்கத்திற்கு மாறாகக் கூட்டம் நிரம்பி வழிந்தது. பெளத்த சமயத்தினர் ஒருபுறமும், சமண சமயத்தினர் அவர்களுக்கு எதிர்ப்புறமாகவும் அணிவகுத்தாற்போல் அமர்ந்திருந்தனர். பிற சமயங் களைச் சேர்ந்தவர்களும் எந்தச் சமயத்தினையும் சாராதவர்களும் கூடப் பெரும் எண்ணிக்கையில் திரண்டிருந்தனர். அந்த விந்தையான வழக்கு எங்ஙனம் நடைபெறுகிறது என்று கண்டிடும் ஆர்வத்தில் அமைச்சர்கள், அறவோர்கள், படைத்தளபதிகள், தூதுவர்கள், ஒற்றர்கள் ஆகிய ஐம்பெருங்குழுவினர் மட்டுமின்றி, 'கரும் விதிகள்' எனப்படும் பல்வேறு அரசுத் துறைகளின் செயலாளர் போன்றவர்களும் பார்வையாளர் பகுதியிலே அமர்ந்திருந்தனர். ரோமாபுரி நாட்டிலிருந்து வந்திருந்த தூதுவரும் அங்கே வருகை புரிந்திருந்தார். புலவர் காரிக்கண்ணனார், முத்துநகை, இளம்பெருவழுதி ஆகி யோரும் ஒருபுறத்தில் உட்கார்ந்திருந்தனர். அறங்கூறு அவையத்தின் தலைவர் முதலில் தம் வழக்கினை யாவரும் அறிந்திட முறையிட்டுக் கொள்ளுமாறு சமணத் துறவியை அழைத் திட்டார். பசுமலையிலே தம் சமயத்தினர் எவ்வாறு பௌத்தர்களால் தாக்கப்பட்டனர் என்பதனை விரிவாக எடுத்துரைத்தார் அந்தச் சமணத் துறவி. "இந்தத் தமிழகத்திலே பௌத்த சமயம்போல இன்று நேற்று வந்து நுழைந்தது அல்ல எங்கள் சமண சமயம். இருபத்து நான்காவது தீர்த்தங் கரர் மகாவீரருக்குப் பின்னே பல சமணத் தலைவர்கள் தோன்றினார்கள். அவர்களுள் பத்திர பாகு மிகவும் குறிப்பிடத்தக்கவர். அவர் சந்திரகுப்த மவுரியருக்கே குருவாக இருந்தவர். அவரது சீடரான விசாக முனிவர் என்பவரே முதன் முதலாகச் சோழ -பாண்டிய நாடுகளில் சமணத்தைப் பரப்பிட வந்தவர்..."